(Full Story) வளர்ப்பு தாயால் சூடு வைத்து கொடுமைப்படுத்தப்பட்ட சிறுமி (அவசியம் வாசியுங்கள்)

0
1960

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

“வாயில் பிடவையை திணித்து விட்டு கரண்டியை நெருப்பில் காய்ச்சி எனது உடம்பில் வைப்பார். நான் பதறி பதறி அழுவேன்.” இது காத்தான்குடியில் வளர்ப்புத்தாய் ஒருவரினால் கடந்த இரண்டு வருடங்களாக கொடுமைக்குள்ளாகி வந்த சிறுமியின் வாக்குமூலம்.

காத்தான்குடி 6ம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலீம் வீதியில் வசித்து வரும் சிறுமியொருவர் அவரது வளர்ப்புத்தாயினால் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு நெருப்பினால் சூடு வைத்து அந்த சிறுமியை வதைத்து வருவதாக கடந்த 11.03.2016 வெள்ளிக்கிழமையன்று முற்பகல் 11.30 மணியளவில் காத்தான்குடி பிரதேச செயலகத்திலுள்ள சிறுவர் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் ஒன்று கிடைக்கின்றது.

அன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பேரவை நடாத்திய கலாசார விழா முடிவடைந்து அதிகாரிகள் வெளியில் நிற்கும் போது இந்த தகவல் கிடைக்கின்றது.

இதனையடுத்து இந்த தகவல் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. உடனடியாகவே காத்தான்குடி பிரதேச செயலாளர் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர்களுடன் பெண் உத்தியோகத்தர் ஒருவரையும் குறித்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

குறித்த சிறமியின் வீட்டுக்குச் சென்ற பிரதேச செயலக அதிகாரிகள் சிறுமியை விசாரணை செய்ததுடன் சிறுமியின் வளர்ப்புத்தாயையும் விசாரணை செய்தார்கள்.
அப்போது இந்த சிறுமியின் தந்தையும் அங்கு வந்து விடுகின்றார்.

சிறுமியின் கையிலும் உடம்பிலும் சூட்டுக்காயங்கள் இருப்பதை கண்ட அவ் உத்தியோகத்தர்கள் அந்தக் காயங்கள் பற்றி வளர்ப்புத்தாயிடமும் தந்தையிடமும் வினவுகின்றார்கள்.

இது அலர்ஜிக் காயம் என அதிகாரிகளுக்கு கூறப்பட்டது. எனினும் அங்கு சென்ற அதிகாரிகள் விடவில்லை. துணிவுடன் இயங்கினார்கள். சிறுமியை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை விசாரணை செய்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர்களிடம் இது அலர்ஜிக் என ஆரம்பத்தில் சிறுமி கூறினாலும் பின்னர் படிப்படியாக சிறுமி தனக்கு தனது வளர்ப்புத்தாயினால் இழைக்கப்பட்ட கொடூரத்தை சொல்லத் தொடங்கினார்.

அந்த சிறுமியின் உடம்பில் காணப்படும் சூட்டுக்காயங்களுக்கு மருந்து போட்ட தாதியர்களும் இந்த சிறுமிக்கு நடந்துள்ள கொடூரத்தைக் கண்டு கண்கலங்கத்தவறவில்லை.

இதையடுத்தே காத்தான்குடி 6ம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலீம் வீதியில் சிறுமியை வதைப்படுத்திய வதை முகாமே இயங்கியது அம்பலத்திற்கு வந்தது.

இந்த விடயம் அன்றைய தினமே காத்தான்குடி பொலிசாருக்கு தகவல் கிடைக்கின்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொலிசார் தீவிரமான விசாரணையில் ஈடுபடுகின்றனர்.

11.03.2016 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.

12.03.2016 சனிக்கிழமை காலை சிறுமியின் வளர்ப்புத்தாய் திருமதி மும்தாஜ் (மௌலவியின் மனைவி) மற்றும் சிறுமியின் தந்தை மௌலவி மஜீத் ரப்பாணி ஆகிய இருவரையும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிசார் விசாரணை செய்தனர்.

பின்னர் 13.03.2016 ஞாயிற்றுக்கிழமையன்று சிறுமியின் வளர்ப்புத்தாய் திருமதி மும்தாஜ் மற்றும் சிறுமியின் தந்தை மௌலவி மஜீத் றப்பாணி இருவருடன் மௌலவியின் மகன் ஆகிய மூவரையும் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி பொலிசார் கைது செய்தனர்.

துரித விசாரணையில் ஈடுபட்ட காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தலைமையிலான பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பொலிஸ் குழுவினர் இந்த சிறுமிக்கு இடம் பெற்றுள்ள கொடுமை குறித்து அறிந்து கொண்டனர்.

இதையடுத்து இவர்களிள் வாக்கு மூலங்கள் காத்தான்குடி பொலிசாரினால் பதிவு செய்யப்பட்டு 14.3.2016 திங்கட்கிழமையன்று பிற்பகள் சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் மற்றும் அவரவு மனைவி (சிறுமியின் வளர்ப்புத்தாய்) திருமதி மும்தாஜ் உட்பட சிறுமியின் சகோதரர் (மௌலவியின் மகன்) ஆகிய மூவரையும் மட்டக்களப்பு நீதவான் நிதிமன்றத்தில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது சிறுமியின் தந்தை மௌலவி எம்.ஏ.மஜீத் மற்றும் அவரவு மனைவி (சிறுமியின் வளர்ப்புத்தாய்) திருமதி மும்தாஜ் ஆகிய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 28.3.2016 வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.

அத்துடன் குறித்த சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு சட்ட வைத்திய நிபுனரின் ஆலோசனையின் பேரில் அவரின் கண்காணிப்பில் சிகிச்சை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியின் சகோதரரை(மௌலவியின் மகன்) நீதிமன்றக் கண்கானிப்பின் கீழுள்ள சிறுவர் இல்லமொன்றில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் சட்டத்தரணி பிறேம்நாத், மற்றும் சட்டத்தரணி எஸ்.எச்.எம்.றிஸ்வி சட்டத்தரணி பாத்திமா சுல்பிகா ஆகிய மூவரும் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ்.எப்.விஜயகுமார் ஆகியோர் ஆஜராகினர்

இதன் அடிப்படையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கொஞ்சம் கூட ஈவிரக்கம் காட்டாமல் இந்த சிறுமி மீதான கொடுமையை மிக கச்சிதமாக அந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மௌலவியின் மனைவி செய்து வந்துள்ளார் என்பது பல கோணங்களில் காத்தான்குடி பொலிசார் மேற் கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

மேற்படி மௌலவியின் முதல் மனைவி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அந்த முதல் மனைவிக்கும் மௌலவிக்குமிடையில் இரண்டு பிள்ளைகள் அதில் மூத்தது ஆண் பிள்ளை மற்றயது பெண் பிள்ளை இவ்விரண்டு பிள்ளைகளையும் தனது முதல் மணைவி நோயினால் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் மிக சிரமத்துடனேயே மௌலவி வளர்த்துள்ளார்.

முதல் மனைவி மரணிக்கும் போது இந்த சிறுமி பாடசாலைக்கு செல்ல அப்போதுதான் ஆரம்பித்திருந்தார்.

தனது பெண் பிள்ளை வெள்ளை சட்டையணிந்து பாடசாலைக்கு செல்ல வேண்டும். நான் பாசடாலைக்கு கூட்டி செல்ல வேண்டும். பிள்ளையின் கல்வியை நான் காணவேண்டும். இவைகளுக்கு நான் கொடுத்து வைப்பேனா என பலமுறை நோய்வாய்ப்பட்டிருந்த சிறுமியின் தாய் (மௌலவியின் மரணித்த முதல் மனைவி) அயலவர்களுடன் முனங்கி அழுதுள்ளதை அயலவர்கள் இந்த சம்பவத்தின் பின்னர் நினைவு கூறுகின்றனர்.

என் பிள்ளைகளை கண் குறைய பார்த்துவிடாதீர்கள் என்பது முதல் மனைவியின் வேண்டுகோள். இதன் பின்னணியில்தான் இந்த இரண்டு பிள்ளைகளும் வளர்ந்து வந்தனர்.

முதல் மனைவி மரணித்ததையடுத்து மேற்படி மும்தாஜ் என்ற பெண்ணை மௌலவி திருமணம் செய்து கொண்டார்.

வளர்ப்புத்தாயின் (சாச்சியின்) பராமரிப்பில் இந்த இரண்டு பிள்ளைகளும் வளர்ந்து வந்தனர்.

ஆண் பிள்ளை பத்தாம் ஆண்டில் மட்டக்களப்பில் கல்வி கற்று வருகின்றார் இந்த சிறுமி காத்தான்குடியிலுள்ள பெண்கள் பாசடாலையொன்றில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்.

மௌலவியின் இந்த இரண்டு பிள்ளைகளுமே கல்வியில் சிறந்த கெட்டிக்கார பிள்ளைகள் எனக் கூறலாம்.

மௌலவி தனது இரண்டாவது மனைவியை திருமணம் செய்து சுமார் இரண்டு மாதங்கள்தான் இந்த இரண்டு பிள்ளைகளும் சந்தோசமாக இருந்திருப்பார்கள் பின்னர் நாளுக்காள் இந்தப்பிள்ளைகளை அடிப்பது துன்புறுத்துவதுடன் இறுக்கமான கட்டுப்பாடுகளை இந்தப்பிள்ளைகள் மீது விதிப்பது போன்ற நடவடிக்கைகளில் மும்தாஜ் எனப்படும் வளர்ப்புத்தாய் (மௌலவியின் மணைவி) ஈடுபட ஆரம்பித்து விட்டார் என குறித்த சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிள்ளைகள் சிறிய பிழை செய்தால் கூட அதற்கு மிகவும் மோசமான முறையில் அடித்து அந்தப்பிள்ளைகளை அச்சுறுத்தி வந்த இந்த வளர்ப்புத்தாய் நாளடைவில் பிள்ளைகளின் மரணித்த தாயின் குடும்பத்தவர்களுடான தொடர்பையும் பிள்ளைகளை விட்டும் தூரப்படுத்தினார் எனவும் அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தச் சிறுமி பாடசாலைக்கு செல்வதும் பிரத்தியேக வகுப்புக்குகளுக்கு செல்வதுமே தவிர அயல் வீட்டு பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது அல்லது அயல் வீடுகளுக்கு செல்வது ஓய்வு நேரங்களில் விளையாடச் செல்வது இவை எதற்குமே இந்த வளர்ப்புத்தாய் விட்டது கிடையாது.

வீட்டில் இந்த சிறுமிக்கு நடந்த சித்திரவதையினால் அழுது ஓலமிடும் சத்தம் அயலுள்ளவர்களை கண் கலங்கச் செய்த பல சந்தர்ப்பங்களுமுள்ளதாக அயலுள்ளவர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

இப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் சிறுமியின் தந்தை மௌலவியிடம் இது தொடர்பில் எடுத்துக் கூறினாலும் தந்தை மௌலவி தனது மனைவியின் மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக அவைகளை பொருட்படுத்த வில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இந்த சிறுமியை மௌவியின் இரண்டாவது மனைவி இவ்வளவு கொடுமைப்படுத்துகின்றாளே இந்த சிறுமிக்கு விடிவு கிடைக்காத என பல முறை இறைவனிடம் பிராத்தனையின் மூலம் முறையிட்ட சந்தர்ப்பங்களுமுண்டு எனவும் அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அயலவர்கள் உறவுமுறையினர் யாருமே அந்த வீட்டுக்கு போக முடியாதளவுக்கு அனைவருடனும் சண்டை பிடித்து பகமையை வளர்த்துக்கொண்டிருந்தார் சிறுமியின் வளர்ப்புத்தாய் (மௌலவியின் மனைவி)

வீடு தொடர்ந்து மூடப்பட்டேயிருக்கும் சிறுமி தினமும் மாலைவேளைகளிலும் இரவு நேரங்களிலும் சப்தமிட்டு அழும் சத்தம் கேட்கும் எனவும் அயலவர்கள் தெரிவிப்பதுடன் ஒரு வதைமுகாமாக இந்த வீடு காணப்பட்டதாகவும் அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சில வேளைகளில் வீட்டிலுள்ள பீங்கான் மற்றும் சமையல் பாத்திரங்களையும் இந்த சிறுமியை கழுவுமாறும் துப்பரவு செய்யுமாறும் இந்த கொரூரமான வளர்ப்புத்தாய் உத்தரவிடுவார் அதனை இந்த சிறுமி நிறைவேற்றுவார் எனவும் குறிப்பிடுகின்றனர்.

பாடசாலைக்கு செல்வதற்காக காலை வேளையில் தன்னை தயார் படுத்திக் கொண்டு நேரகாலத்துடனேயே வீட்டு வெளிக்கதவோரம் தனது பாடப்புத்தகத்தை பார்த்த வண்ணம் கவலையுடன் இந்த சிறுமி இருந்த காட்சிகளையும் அயலவர்கள் கண்டுள்ளனர்.

இந்த சிறுமி தனது வளர்ப்புத்தாயை உம்மி என்றே அழைத்து வந்துள்ளது.

வாயில் பிடவையை திணித்து விட்டு கரண்டியை நெருப்பில் காய்ச்சி எனது உடம்பில் உம்மி வைப்பார் நான் பதறி பதறி அழுவேன் என குறித்த சிறுமி தெரிவித்துள்ளார்.

பரீட்சைகளில் ஒரு புள்ளி குறைவாக எடுத்தால் போதும் அதை காரணம் காட்டி அடித்து அடித்து துன்புறுத்தி வந்த வளர்ப்புத்தாய் கடந்த ஒரு வருடமாக கரண்டியை நெருப்பில் காய்ச்சி அதனை உடம்பின் பல பாகங்களிலும் வைப்பார் எனவும் அந்த சிறுமி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

சூடு வைத்து ஏற்பட்ட காயங்களுக்கு மேலேயே மீண்டும் மீண்டும் நெருப்பில் கரண்டியை காய்ச்சி சூடு வைப்பார். நான் தாங்க முடியாமல் அழுவேன்.

பேபிகிறீமை அந்தக்காயங்களுக்கு மேல் போடுவார். ஒரு மாத்திரை ஒன்றையும் எனக்கு அவ தருவார் நான் நடக்க முடியாமல் பாடசாலைக்கு செல்வேன்.

இதை யாரிடமாவது சொன்னால் உணக்கு நெருப்பால் சூடு வைப்பேன் கவனம் யாரிடமும் இதை சொல்லக் கூடாது என கூறி கூறியே எனக்கு சூடு வைப்பாhர். நான் இதை வாப்பாவிடமும் சொல்வதில்லை அச்சத்தினால்தான் என இந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

மிகவும் வேதனையுடன் நடக்க முடியாமல் கஸ்டப்பட்டு பல முறை பாசடாலைக்கு இந்த சிறுமி சென்றதையும் வகுப்பில் சக மாணவர்களும் அவதானித்தாக மாணவர்கள் குறிப்பிடுகின்றனர். வாயில் அடித்ததால் வாய்க்குள்ளும் பல காயங்களுடன் சிறுமி காணப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த சிறுமியின் உடம்பின் பல இடங்களிலும் காணப்படும் காயங்களும் சூடு பட்ட தழும்புகளையும் பார்த்தால் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட சூடுகள் வைக்கப்பட்டிருக்க கூடும் என பெண் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் மௌத்தான தாயின் குடும்பத்தவருடன் பேசக் கூடாது அவர்களைக் கண்டால் கதைக்க கூடாது என்றும் வளர்ப்புத்தாய் அச்சுறுத்தியே வந்துள்ளார்.

இந்த சிறுமிக்கு மகிழ்ச்சி விளையாட்டு என்பன தெரியாது கவலை பயம் தோய்ந்த முகமே இந்த சிறுமியில் காணப்படும் என குறிப்பிடுகின்றனர்.

இவ்வளவு கொடூரம் தனது மனைவியினால் தான் பசாமாக வளர்க்கும் பிள்ளைக்கு நடக்கின்றது என்பதை தந்தை மௌலவிக்கு தெரியாததுதான் இங்கு பெரிய புதிராக உள்ளது.

மௌலவிக்கு உண்மையில் இந்த விடயம் தெரியாதா தெரிந்தும் தெரியாதது போல் கண்டும் காணாதது போல் தந்தை மௌலவி இருந்தாரா என்பன போன்ற கேள்விகள் இங்கு நிறையவே எழும்புகின்றன.

ஊரிலேயே இருக்கும் மௌலவிக்கு தனது வீட்டிலிருந்து சுமார் 25 மீற்றருக்குள் உள்ள அரபுக்கல்லூரியில் தொழில் புரியும் மௌலவிக்கு ஏன் தனது பிள்ளைகளின் நிலைமை புரிய வில்லை அயலவர்கள் சொல்லியும் ஏன் விளங்க வில்லை என்பதுதான் அனேகர் கேட்கும் கேள்வியாகும்.

தனது பிள்ளைக்கு இவ்வாறு நடந்த சம்பவம் தனக்கு தெரியாது என்றுதான் மௌலவி பொலிசாரிடமும் கூறியதாக தெரியவருகின்றது.

குறித்த சிறுமியை கொடுமைப்படுத்திய இந்த வளர்ப்புத்தாய் தான் சிறுமிக்கு செய்த சித்திரவதையை ஏற்றுக் கொண்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

தாயை இழந்த இந்த சிறுமிக்கு நடந்துள்ள இந்த கொடூரமானது மிகவும் வேதனையான சம்பவமாகும்.

இன்று நாட்டில் சிறுவர்கள் மீதான வன்முறை மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில் இவைகளுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

சட்டங்களும் இறுக்கமாக்கப்படல் வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றனர்.

பிள்ளைகளை இரக்கம் காட்டாமல் அலட்சியப்படுத்தி அடித்து துன்புறுத்தினால் 1995ம் ஆண்டு 22ம் இலக்க குற்றவியல் சட்டத்தின் 308வது பிரிவின் கீழ் இரண்டு வருடத்திற்கு குறையாததும் பத்து வருடத்திற்கு மேற்படாததுமான சிறைத்தண்டனையும் நஸ்ட ஈடும் வழங்க வேண்டும் என சட்டம் கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவேதான் பிள்ளைகள் விடயத்தில் பெற்றார் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளின் நிலையை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

நன்றி விடிவெள்ளி பத்திரிகை (18.3.2016)

LEAVE A REPLY