அடுத்த ஆட்டத்திலும் அசத்த ஆர்வமாக இருக்கிறேன்: கிறிஸ் கெய்ல்

0
206

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த சூப்பர்-10 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து சவாலான ஸ்கோராக 182 ரன்கள் சேர்த்த போதிலும், அந்த இலக்கு வெஸ்ட் இண்டீஸ் ‘சூறாவளி’ கிறிஸ் கெய்லின் சிக்சர் மழையில் கரைந்து போனது.

தனி வீரராக களத்தில் நின்று இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை வாட்டிவதைத்த கிறிஸ் கெய்ல், 11 பந்துகள் மீதம் வைத்து வெஸ்ட் இண்டீசுக்கு வெற்றியை தேடித்தந்தார். கெய்ல் 100 ரன்கள் (48 பந்து, 5 பவுண்டரி, 11 சிக்சர்) குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் 86 ரன்களை சிக்சர், பவுண்டரி மூலமே திரட்டி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 13 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி அதில் பெற்ற 9-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் பெற்றது.

36 வயதான கிறிஸ் கெய்லும் சில சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில் கெய்லின் சிக்சர் எண்ணிக்கை 98-ஐ எட்டி இருக்கிறது. விரைவில் அவர் சிக்சரில் ‘செஞ்சுரி’ அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தப்போகிறார். இதே போல் 20 ஓவர் உலக கிண்ண போட்டியில் இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர், ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் அடித்த 2-வது வீரர் (நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லமும் 2 சதம்), 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக செஞ்சுரி போட்ட 3-வது வீரர், அதே சமயம் 20 ஓவர் உலக கிண்ணத்தில் அதிவேக சதத்தில் முதல் இடம்… இப்படி பல்வேறு மகிமைகள் அவரது வசம் ஆகி இருக்கின்றன.

பின்னர் கெய்ல் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த உலக கிண்ண போட்டிக்கு உண்மையிலேயே நாங்கள் மிகச்சிறப்பாக தயாராகி இருக்கிறோம். பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்று. அது தான் களத்தில் சாதிக்க உதவியிருக்கிறது. அது மட்டுமின்றி இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்றதாக காணப்பட்டது. இரவில் பனிப்பொழிவின் தாக்கமும் (பவுலர்கள் பந்தை சரியாக பிடித்து வீச சிரமப்பட்டனர்) கைகொடுத்தது.

நான் ஒரு ஓவரை எதிர்கொண்டு ஆடிய பிறகு அடுத்த மூன்று ஓவர்களை தொடர்ந்து சாமுவேல்ஸ் சந்தித்தார். அவரது பேட்டிங் எனது நெருக்கடியை வெகுவாக குறைத்தது. இங்கு நாங்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறோம். இந்த ஆடுகளத்தன்மை எப்படி என்பதையும், இந்த இலக்கை ‘சேசிங்’ செய்து விட முடியும் என்பதையும் அறிந்திருந்தோம். ரன்ரேட் அவசியம் என்பதால் ஆட்டத்தை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்று விரும்பினோம். கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

களம் இறங்குவதற்கு முன்பாக சக வீரர் சுலிமான் பென், ‘பேட்டிங் மூலம் என்னை குஷிப்படுத்துங்கள், கெய்ல்’ என்று கூறினார். அவரது வார்த்தைகளும் எனக்கு உத்வேகம் தந்தது. வெற்றி கொண்டாட்டத்தில் நாங்கள் ஆடிய டான்ஸ் குறித்து கேட்கிறீர்கள். அது வெய்ன் பிராவோவின், ‘சாம்பியன்’ என்ற ஆல்பத்தில் இடம் பெற்ற நடனம் ஆகும்.

அடுத்து இலங்கை அணியை பெங்களூருவில் (மார்ச்.20) சந்திக்க இருக்கும் ஆட்டத்தையும் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறேன். ஏனெனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு எனது சொந்த மைதானமாகும். மீண்டும் விருந்து படைத்து அனைவரையும் குதூகலப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கெய்ல் கூறினார்.

கெய்லின் விசுவரூப ஆட்டத்தை பார்த்து பிரபலங்கள் சிலாகித்து போயுள்ளனர். இந்திய வீரர் யுவராஜ்சிங், ‘இது கெய்ல் புயல்’ என்று டுவிட்டரில் வர்ணித்துள்ளார். இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டரில், ‘கெய்லின் சாதாரண சிக்சர்கள் பெவிலியனின் மேல்பகுதிக்கு பறந்தது. மெகா சிக்சர் ஏறக்குறைய அரபி கடலுக்கே போய் விட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY