90நாட்கள் வரை என்னை கீழாடையுடனே வைத்திருந்தனர்: பொன்சேகாவின் செயலாளர்

0
211

‘2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, சரத் பொன்சேகாவுக்கான நான் வேலை செய்தேன். அதற்காக, என்னை கைதுசெய்து 90 நாட்கள், கீழாடையுடன் மட்டுமே அடைத்துவைத்திருந்தனர்’ என்று பொன்சேகாவின் முன்னாள் செயலாளர் சேனக்க டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ‘2010 பெப்ரவரி 08ஆம் திகதியன்று, சரத் பொன்சேகாவுடன் சேர்த்து என்னையும், அன்றிரவே கைதுசெய்தனர்.

பின்னர், நான்காம் மாடிக்குக் கொண்டு சென்றனர். அதிகாலை 2 மணியளவிலேயே எழுப்பி என்னை விசாரித்தனர். சுமங்கல தேரருக்கு நான், கார் கொடுத்ததாகவும் அக்காரில் வெடிபொருட்கள் இருந்தாகவும் என்மீது குற்றஞ்சுமத்தினர்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராகச் சாட்சியமளிக்குமாறு என்னை வற்புறுத்தினர். நான் மறுத்துவிட்டேன்.

பயங்கரமான பயங்கரவாதிகளை அடைத்து வைத்திருந்த அறையிலேயே என்னையும் அடைத்துவைத்திருந்தனர். அவ்வறையில், பிரபாகரனின் வலதுகையாகச் செயற்பட்ட மொரிஸ் இருந்தார்.

கீழாடையுடன் மட்டுமே 90 நாட்கள் என்னை அடைத்துவைத்திருந்தனர். எந்தவொரு குற்றச்சாட்டுமின்றி, 440 நாட்கள் சிறையில் இருந்தேன்’ என்றார்.

LEAVE A REPLY