இந்த அரசாங்கத்தினை அமைக்க காரணமான முஸ்லிம் தமிழ் சமூகமானது அதனை வாழ வைப்பதற்கும் முயற்சிக்க வேண்டும்: ஷிப்லி பாரூக்

0
207

இந்த அரசாங்கமானது சிறுபான்மை சமூகத்தின் ஒற்றுமையினால் உறுவாக்கப்பட்ட அரசாங்கமாக இருக்கின்றது. கடந்த காலங்களில் விடுதலை புலிகளுடன் சேர்ந்து முஸ்லிம்களும் சிறுபான்மை சமூகத்தின் விடுதலைக்காக போராடிய வரலாறுகளும் பதியப்பட்டுள்ளது.

அது 1988ம் ஆண்டு வரைக்கும் தொடர்ந்தது. எப்பொழுது விடுதலை புலிகளின் துப்பாக்கிகள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திருப்பபட்டதோ அதனால் அன்றிலிருந்து முஸ்லிம் சமூகத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் இடையிலான விரிசல்கள் ஏற்பட்டு பாரிய பிரச்சனைகளும் ஏற்பட்டன.

ஆனால் இந்த அரசாங்கத்தில் அவைகள் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு இரண்டு சமூகமும் ஒற்றுமை படுத்தப்பட்டுள்ளதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த ஒற்றுமையானது நம் நாட்டில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே இரண்டு சமூகங்களினதும் விருப்பமாகும்.

அதிலும் முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் எல்லா சமூகமும் அண்ணளவாக சமனாக வாழுகின்ற சமூகமாக இருக்கின்றது. அந்த வகையில் எமது கிழக்கு மாகாண சபைதான் எவ்வாறு மூன்று சமூகமும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்கு எடுகோளாகவும் முன்னுதாரணமாகவும் காணப்படுகின்றது.

அந்த வகையிலே கிழக்கு மாகாணத்தில் கல்குடா பிரதேசத்திலேயே மிக முக்கிய பிரச்சனையான காணி பிரச்சனை இருந்து வருகின்றது. உண்மையில் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் ஏற்கனவே இருந்த அரசியல் பின்னணியாகவே இருக்கின்றது. இந்த பிரச்சனை இது வரைக்கும் முடிவிற்கு கொண்டுவரப்படாமல் இருப்பது மனவேதனை அளிக்ககூடிய விடயமாக விளங்குகின்றது.

இந்த காணி பிரச்சனையானது எதிர்காலத்தில் இரண்டு சமூகங்களுக்கும் இடையில் மீண்டும் பாரிய விரிசல் ஏற்பட காரணமாகவும் அமைந்து விடலாம்.

ஆகவே எமக்கு மத்தியில் இருக்கின்ற அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூக சிந்தனையாளர்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு, ஒன்று சேர்ந்து எந்த சமூகமும் பாதிக்காத வகையில் சுமூகமாகவும், சுலபமாகவும் தீர்த்துவைக்கப்பட வேண்டிய கட்டாய காலகட்டத்தில் நாம் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மீண்டும் ஒரு முறை தமிழ் முஸ்லிம் சமூகம் என இரண்டு சமூகங்களும் பிரிந்து கொண்டு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்ற சமூகங்களாக மாறுவதிலிருந்து எம்மை இறைவன் பாதுகாக்க வேண்டும் என கோறளைபற்று மேற்கு பிரதேச செயலகத்தில் பெண்கள் தலைமை தாங்கும் பத்து குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களை கையளிகும் நிகழ்வு 2016.03.17ஆத்திகதி (இன்று) பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், பொறியிலாளருமான ஷிப்லி பாரூக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கோறளைபற்று மேற்கு பிரதேச செயலாளர் நெளபல், கோறளைபற்று மத்தி உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். றியாஸ், கோறளைபற்று மேற்கு உதவி செயலாளர் ஜனாபா ஹில்மியா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

 தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வில் மேலும் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாரூக், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டமானது வறுமையில் முதலிடத்தில் இருக்கின்ற மாவட்டமாக இருந்து வருகின்றது. இதற்கு எமக்கு கிடைக்கின்ற வழங்களை சரியான முறையில் பயண்படுத்தாமையும், அதற்கான சரியான வழிகாட்டல்கள் இன்மையுமே முக்கிய அடிப்படை விடயமாகவும், காரணமாகவும் விளங்குகின்றது.

எமது மக்களுக்கு கிடைக்கின்ற உதவிகளை சரியான முறையில் சுய தொழிலுக்காக பயண்படுத்துவார்களாயின் நிச்சயமாக அவர்களால் அவர்களுடைய குடும்பத்தினை பொருளாதார கஸ்டத்திலிருந்து விடுபடச் செய்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாவட்டம் என்ற பெயரினை கூட மாற்ற முடியும்.

இங்கு நான் ஒரு விடயத்தினை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதாவது கடந்த உயர்தர பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து உயிரியல் பிரிவில் இருந்து ஒரு தமிழ் மாணவி மாவட்டத்தில் முதலாவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார். இத்தனைக்கும் அந்த மாணவியின் தாய் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டு வாழ்வாதாரத்திற்காவும் தனது பிள்ளையின் படிபிற்காவும் பொன்னாங்கனி கீரைவிற்ற வருமானத்திலிருந்தே அந்த மாணவி சாதனை படைக்க காரணமாக இருந்துள்ளார்.

இதில் ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் தங்களது பிள்ளைகளை படிப்பிற்க வேண்டும் என சிந்திக்கின்ற தாய்மார்கள் மிக குறைவாகவே காணப்படுகின்றனர்.

எங்களுக்கு போதியளவு பொருளாதாரம் இருந்தால் மாத்திரமே எங்களது பிள்ளைகளை படிப்பிப்போம் என்ற மன நிலையிலேயே பெரும்பாலான முஸ்லிம் தாய்மார்களின் சிந்தனைனைக்கு மத்தியில் அந்த தமிழ் மாணவியின் தாய் மூன்று நேர உணவிற்கு கூடிய கஸ்டப்பட்ட நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்து கொண்டு தனது மகளினை மாவட்டத்தில் சாதனை படைக்க வைத்திருப்பதானது எமது முஸ்லிம் தாய்மார்க்களுக்கு முக்கிய படிப்பினையாக இருக்கின்றது.

சுய தொழிலிற்காக இவ்வாறான தையல் இயந்திரங்களை உதவிகளாக வழங்கப்படுகின்ற பொழுது அதனை வைத்து மாதத்திற்கு இரண்டாயிரம் ரூபாய்களை கூட வருமானமாக பெறுவதற்கு எமது தாய்மார்கள் முயற்ச்சி செய்ய வில்லை என்றால் நாங்கள் இவ்வாறான உதவிகளை வழங்குவதில் எந்த பிரயோசனும் இல்லாமல் போய்விடும்.

நாங்கள் அரசியல் செய்வதற்காவும் மக்களுடைய வாக்குகளை பெறுவதற்காகவும் இவ்வாறான உதவிகளை செய்யவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமென்றால் 22000 ரூபாய்கள் பெறுமதியான தையல் இயந்திரங்களை 2000 ரூபாய்களாக பிரித்து 110 நபர்களுக்கு பகிர்ந்தளித்து 110 வாக்குகளை குறிவைக்க எங்களால் முடியும்.

ஆனால் மாறாக இந்த பத்து தையல் இயந்திரங்களையும் வைத்து பத்து குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தினை அமைத்துக்கொள்ளவதோடு தன்னிரைவும் அடைய வேண்டும் என்பதே எங்களுடைய மிக முக்கிய நோக்கமாக இருக்கின்றது எனத் தெரிவித்தார் பொறியலாளர் ஷிப்லி பாரூக்.

-எம்.ரீ. ஹைதர் அலி-

LEAVE A REPLY