நாசகார வேலை நிரூபணமானால்?

0
219

திடீர் மின்சாரத் துண்டிப்புக்கு ஏதாவது நாசகாரவேலைகள் தான் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் மன்னிப்பு வழங்காது என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலும் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்புக்கு சதிவேலைகள் காரணமாக இருப்பதற்கான சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும், ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் பூர்த்தியடைந்த பின்னரே உண்மையான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் தினகரனுக்கு தெரிவித்தார்

மின்சார விநியோகத்தைத் தடைசெய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியானது அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடாகப் பார்க்கப்படாது நாட்டுக்கு எதிரான செயற்படாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இவ்வாறான நடவடிக்கையில் எவராவது ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என்றார்.

இதேவேளை, நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனக் கூறி மக்களைக் குழப்புவதற்கு சில குழுவினர் முயற்சிக்கின்றனர். இருந்தபோதும் சர்வதேச நாடுகள் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு முன்வந்துள்ளன என்றும் அவர் கூறினார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியஸ்தர்கள் குழுவைத் தான் சந்தித்திருந்ததாகவும், இலங்கைக்கு வழங்கும் உதவிகளை இரண்டு மடங்காக அதிகரிக்க அவர்கள் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையிலிருந்து மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருக்கும் தடையை விரைவில் நீக்கமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்துகொண்டு விரைவில் ஜீ.எஸ்.பி பிளஸூக்கு விண்ணப்பித்து அதனையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(Thinakaran)

LEAVE A REPLY