பாகிஸ்தான் அபார வெற்றி

0
328

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண ஆட்டத்தில் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான்– மோர்தசா தலைமையிலான வங்காளதேசம் அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணிக் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய அகமது ஷெசாத்தும், ஷார்ஜில் கானும் அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்கள். அகமது ஷெசாத் அசத்தலாக விளையாடி 39 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

3-வதாக களமிறங்கிய முகமது ஹபீஸ் 42 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் அப்ரிடி நிண்ட நாட்களுக்கு பிறகு தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 19 பந்துகளை சந்தித்து 4 சிக்ஸ், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 201 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது மற்றும் அராபத் சன்னி தலா 2 விக்கெட்டுகளை வீழத்தினார்கள்.

இதையடுத்து பாகிஸ்தான் அணியின் ஆக்ரோஷமான பந்து வீச்சை சமாளித்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது.

தொடக்க ஆட்டகாரர்களாக சவுமிய சர்க்காரும், தமிம் இக்பாலும் களமிறங்கினார்கள். முகமது அமிர் பந்தில் சவுமிய சர்க்கார் தனது ஆப் ஸ்டெம்பை பறிக்கொடுத்து டக் அவுட் ஆனார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிம் இக்பால் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் ரன் ரேட் ஏறிக்கொண்டே செல்ல, மறுபுறம் விக்கெடுகளை இழந்த வண்ணம் இருந்தது வங்காளதேசம். ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹசன் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

20 ஓவர் முடிவில் வங்காளதேசம் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டும் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர் மற்றும் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆட்டநாயகனாக அப்ரிடி தேர்வு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY