வெளிநாடு செல்ல முஷரப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

0
149

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது அந்நாட்டு அரசு தேசத்துரோக வழக்கு உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதனால் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சிந்து மாகாண ஐகோர்ட்டு, முஷரப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையை கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் நீக்கியது.

இதை எதிர்த்து, பாகிஸ்தான் அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அப்பீல் மனுவில், முஷரப் மீது, தேசத்துரோக வழக்கு தவிர மேலும் பல வழக்குகள் இருப்பதால், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கக்கூடாது என்று கூறி இருந்தது.

இந்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி நசிருல் முல்க் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு, முஷரப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்கி சிந்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், அவர் மீதான வழக்குகள் விசாரணை முடிவும் வரை அவர் வெளிநாடு செல்ல தடை நீடிக்கும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முஷரப் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் முஷரப் வெளிநாடு செல்வதற்கு அரசு விதித்துள்ள தடையை நீக்குமாறு இன்று உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY