47 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் இந்திய அணி படுதோல்வி

0
130

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் பிரதானச் சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.

முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஆண்டர்சன் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோன்சி 21 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் நெஹ்ரா, அஸ்வின், பும்ப்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இந்தியாவின் வெற்றிக்கு 127 ரன்கள் வெற்றி இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்தது. இதையடுத்து 127 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே தவான் விக்கெட்டை பறிகொடுத்தது இந்தியா. 3 பந்துகளை சந்தித்த அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ரோகித் சர்மா 5 ரன்களிலும், ரெய்னா 1 ரன்னிலும், யுவராஜ் சிங் 4 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய விராட் கோலி 23 எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் விக்கெட் வீழ்ச்சி மீண்டும் தொடர்ந்தது. பாண்டியா 1 ரன்னிலும், ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் கேப்டன் தோனி சிறிது நேரம் போராடினார். 30 ரன்களில் தோனி ஆட்டமிழந்த பிறகு இறுதி நம்பிக்கையும் பொய்த்து போனது. இறுதியில் 79 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் சண்டீர் அற்புதமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை சாய்த்தார். சோதி 3 விக்கெட்டுக்களையும், ஆண்டர்சன் 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.

நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே பரிதாபமாக தோல்வியடைந்தது. நாக்பூர் மைதானத்தில் குவிந்த இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.

LEAVE A REPLY