முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா

0
164

டி20 உலகக்கிண்ணத்தில் இந்திய பெண்கள் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பெண்களுக்கான உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கின. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணியில் கேப்டன் மிதாலி ராஜ், வனிதா இருவரும் சிறப்பான துவக்கம் அளித்தனர். அதிரடியாக பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்ட வனிதா 24 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மிதாலி ராஜ் தனது பங்கிற்கு 42 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். முன்னதாக மந்தனா ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டினார்.

வங்காளதேச பந்து வீச்சாளர்களை மிரட்டிய ஹர்மன்பிரீத் கவுர் 29 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் விளாசினார். கடைசி நேரத்தில் வேதா கிருஷ்ணமூர்த்தி அதிரடியாக ஆடி அவுட் ஆகாமல் 36 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. டி20 போட்டிகளில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. துவக்க வீராங்கனை அயாஷா ரஹ்மான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சிதா இஸ்லாம் 4 ரன்களில் நடையைக் கட்டினார். மற்றொரு துவக்க வீராங்கனை ஷார்மின் அக்தர் 21 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் 20 ஓவர் முடிவில், வங்காளதேச அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அனுஜா பாட்டீல், பூனம் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

LEAVE A REPLY