இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை உளவுபார்க்க பாகிஸ்தான் பயன்படுத்திய ஸ்மெஷ்அப்; பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியது

0
204

இந்திய ராணுவ வீரர்களின் செயல்பாட்டை உளவுபார்க்க பாகிஸ்தான் பயன்படுத்திய ஸ்மெஷ்அப் என்ற செயலியை கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

இந்திய ராணுவ வீரர்களின் செயல்பாட்டை உளவுபார்க்க ஸ்மெஷ்அப் என்ற ஒற்றறியும் கருவியை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக பிரபல ஆங்கில செய்தி சேனல் சமீபத்தில் கண்டுபிடித்து, செய்தியாக வெளியிட்டது.

பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ., இந்த ஸ்மெஷ்அப் மூலம் இந்திய ராணுவ வீரர்களின் சுமார்ட் போனுடன் இணைப்பை ஏற்படுத்த பயன்படுத்துகின்றனர் என்பது அந்த ஆங்கில செய்தி சேனல் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பாதுகாப்பு படை வீரர்களின் கம்ப்யூட்டர்களும் இந்த உளவு அப்-பினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஒருமுறை நாம் இந்த அப்-பை பதிவிறக்கம் செய்து பயன்பாட்டுக்கு வந்ததும், நமது கைபேசிகளில் ஸ்டோர் செய்யப்பட்டு வைத்திருக்கும் தகவல்கள் திருடப்படுகிறது. நமது அனைத்து நடவடிக்கையும் பின்தொடரப்படுகிறது. செல்போன் பேச்சு விபரம், குறுஞ்செய்திகள் மற்றும் போட்டோக்களையும் திருடமுடியும்.

இதன்மூலம் ஜனவரி மாதம் பதன்கோட் விமானப்படைத்தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் நடவடிக்கை தொடர்பான முக்கியமான தகவல்களும் பாகிஸ்தான் உளவுப்படையினரால் களவாடப்பட்டுள்ளது. இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழில் பிரிவு பாதுகாப்பு படை முக்கிய இலக்காக்கப்பட்டுள்ளது.

கராச்சியை சேர்ந்த ஒருவரால் இயக்கப்படும் இந்த ரகசிய ஒற்றறியும் முறையின்மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஜெர்மனியில் உள்ள சர்வர் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த அப்-பை கையாண்ட பாகிஸ்தானியர், இந்திய ராணுவத்தினருடன் மிகவும் மென்மையான முறையில் தொடர்பை ஏற்படுத்தி அவர்களை கவர முயற்சித்து உள்ளனர். குறிப்பாக, களப்பணியில் உள்ளவர்கள் இலக்காக்கப்பட்டு உள்ளனர், ஓய்வு பெற்றவர்களும் இதில் தப்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தீங்கிழைக்கும் இந்த ஸ்மெஷ்அப்-பை தனது பிளே ஸ்டோரில் இருந்து தற்போது கூகுள் நீக்கியுள்ளது.

LEAVE A REPLY