ஹிதின் கியாவ் மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு

0
174

ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ்(67) மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மியான்மரில் கடந்த நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்த நிலையில் தற்போதைய அதிபரின் பதவிக் காலம் வருகிற 31–ந் தேதியுடன் முடிவடைகிறது. அதை தொடர்ந்து புதிய அதிபர் வருகிற ஏப்ரல் 1–ந் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். மியான்மர் சட்டப்படி அதிபரை எம்.பி.க்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்க முடியாது. சூகி இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் ஆங் சான் சூகி, இந்த அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

எனவே, அவர் தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை களம் இறக்கியுள்ளார். இவர் சூகியின் பால்யகால நண்பர் ஆவார். இவர் தவிர சூகி கட்சியின் எம்.பி. ஹென்றி வான் தியோ மற்றும் ராணுவத்தின் சார்பில் மியந்த் ஸ்வீ என்பவரும் போட்டியிட்டனர்.

657 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் இன்று காலை புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு தொடங்கியது. ஐந்து உறுப்பினர்கள் இன்று சபைக்கு வராதநிலையில் 652 எம்.பி.க்கள் இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் கைகளிலும் வாக்குச்சீட்டை அளித்த சபாநாயகர் மான் வின் கைங் தான், ‘நீங்கள் அதிபராக்க நினைக்கும் நபரின் பெயரை ‘டிக்’ செய்தும், விரும்பாத பெயரை அடித்து, நீக்கியும் உங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்’ என அறிவித்தார்.

இதையடுத்து, நடைபெற்ற வாக்குப்பதிவில் ஹிதின் கியாவ் அமோக வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான 652 வாக்குகளில் 360 வாக்குகளை பெற்ற ஹிதின் கியாவ் மியான்மரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மியான்மர் நாட்டில் சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிரபலமான கவிஞராக திகழ்ந்தவரின் மகனான ஹிதின் கியாவ்(67), பல ஆண்டுகளாக ஆங் சான் சூகியின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளராக இருந்து வந்துள்ளார்.

ஆங் சான் சூகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது தொண்டு நிறுவனங்கள் தொடர்பான நிதிபரிவர்த்தனைகளை இவர் மிக நேர்மையாக கையாண்டு வந்ததால், தனக்கு பதிலாக இவரை அதிபர் பதவியில் நியமிக்க ஆங் சான் சூகி விரும்பியதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY