இனக்கலவரத்தின் பின்னர் ஏறாவூர் வர்த்தக நகரம் சோபை இழந்து பாழடைந்து போய் விட்டது: எஸ். வியாழேந்திரன்

0
211

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் –

ஏறாவூர் 4 ஆம், 5 ஆம் குறிச்சிப் பிரதேசங்கள் 1985 ஆம் ஆண்டின் இனக் கலவர காலத்திற்கு முன்னர் செழிப்பு மிக்க ஒரு வர்த்தக நகராக இருந்து வந்துள்ளது.

எனினும், இனக்கலவரத்தின் பின்னர் இந்நகரம் சோபை இழந்து பாழடைந்து போய் விட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகரில் ஏறாவூர் 4ஆம், 5ஆம் குறிச்சிகள், மற்றும் எல்லை நகர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக புதிய வர்த்தக சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

ஏறாவூர் ஸ்ரீ கணேச காளிகா ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை மாலை ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடந்த கூட்டத்தின்போது புதிய வர்த்தக சங்கம் அமைப்பது பற்றித் தீர்மானம் எடுக்கப்பட்டு புதிய வர்த்தகர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு நிருவாகிகளும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இந்நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் அதிதியாகப் பங்கேற்றிருந்தார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வியாழேந்திரன்,

இனக்கலவரத்தின் பின்னர் சோபை இழந்து பாழடைந்து போய் கிடக்கும் ஏறாவூர் 4 ஆம், 5 ஆம் குறிச்சிப் பிரதேசங்களை தொடர்ந்தும் இதே நிலைமையில் விட்டு வைக்காது மீண்டும் இதனை செழிப்பும் சுறுசுறுப்பும் மிக்க வர்த்தக நகராக மாற்றியமைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டுப் போயுள்ள இப்பிரதேச வர்த்தகர்களினதும் ஏனைய மக்களினதும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன். இதற்கு வர்த்தகர்களினதும் பொதுமக்களினதும் பூரண ஒத்துழைப்புத் தேவை.

புதிய வர்த்தகர் சங்கம் இப்பிரதேச வர்த்தகர்களின் பாதுகாப்பிலும் நலனிலும் அக்கறை கொண்டு செயலாற்ற வேண்டும். என்றார்.

புதிய வர்த்தகர் சங்கத்தின் தலைவராக ரீ. செல்வராஜ், உப தலைவர் ஜே. அன்ரனி, செயலாளர் எஸ். சண்முகம், உப செயலாளர் ஐ. மர்சூக், பொருளாளர் வி. பிரகாஸ், கணக்காய்வாளர் செல்வி கே. ரஞ்சினி, அத்துடன் 11 பேர் கொண்ட நிருவாக சபையும் போசகர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், ஏறாவூர் ஸ்ரீ கணேச காளிகா ஆலய பரிபாலன சபைத் தலைவர் பி. கஜேந்திரகுமார், எஸ். ஜெகன், வி. பாக்கியராசா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY