(Full Story) ‘மதுகொடுத்து மண்டைகளில் போட்டு கருகக் கருக எரித்தோம்’

0
710

போதை தலைக்கேறும் வரையிலும் நன்றாக மதுபானம் கொடுத்தோம். வாங்கி அடுக்கியிருந்த போத்தல்களை வாரிவாரி, மேசையில் அடுக்கினோம். குடித்தார்கள். குடியோ குடியெனக் குடித்தார்கள். அவர்கள் அனைவரும் மயங்கியதன் பின்னர், இரும்புக் கம்பிகளினால் மண்டைகளில் மடார் மடாரென போட்டு, பெற்றோல் ஊற்றி எரித்தே கொன்றோம்’ என ஐந்து சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான வர்த்தகர் வாக்குமூலமளித்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதியன்று, புத்தளம், தங்கொட்டுவ பகுதியில், கருகிய நிலையில் சடலங்கள் ஐந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர், ஞாயிற்றுக்கிழமை (13) கைதுசெய்யப்பட்டனர்.

‘கப்பம் பெறுவதை அடிப்படையாக வைத்தே இந்த ஐந்து படுகொலைகளும் புரியப்பட்டுள்ளன எனத் தகவல்கள் கிடைத்துள்ளன’ என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கோனகல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான அமில நுவான் அல்மோதா (வயது 28) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர், கொதிகலனாளர் (பொய்லர்) என்று அப்பிரதேசத்தில் அறியப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனைய நால்வரும், அவரிடம் பணிபுரிபவர்களான ரோஹித்த நியோமல் நிஷாந்த (வயது 40), சுனேத் மதுசங்க (வயது 28), கே.ஜே. சமன்குமார மற்றும் ரைக்க பிரதீப் ஆகியோராவர்.

இவர்களே, இவ்வாறு இரகசிய பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வானுக்குள் கருகிய நிலையில் மீட்கப்பட்ட ஐந்து சடலங்களில், மூன்று சடலங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

நெவ் கபில என்றழைக்கப்படும் கபில செனரத் பண்டார, பேலியகொடை நீல் மற்றும் கட்டான நிஷாந்த என்றழைக்கப்படும் சூப்புவா ஆகியோரின் சடலங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.

நெவ் கபில என்பவரே வாகனத்தைச் செலுத்திச் சென்றுள்ளார் என்றும் அவ்வாகனம், கொள்ளுப்பிட்டியவில் உள்ள பெண்ணொருவருக்குச் சொந்தமானது என்றும், வாடகையின் அடிப்படையில் அவ்வாகனம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளமையும் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட ஐந்து சடலங்களில், நெவ் கபில என்பவரின் சடலத்தை, அவர் அணிந்திருந்த வெள்ளி மாலை மற்றும் இடது காலில் ஏற்பட்டிருந்த மறிவுக்குப் பொறுத்தப்பட்டிருந்த தகடு ஆகியவற்றை வைத்து அவருடைய மனைவி இனங்கண்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், நெவ் கபில என்றழைக்கப்படும் சீசர் கபிலவின் அலைபேசியை சோதனைக்கு உட்படுத்தி, அதிலிருந்த சந்தேகத்துக்கிடமான மற்றும் நீண்ட தடவைகள் உள்வந்த, வெளிச்சென்ற அழைப்புகளை அடிப்படையாக வைத்தே பிரதான சந்தேகநபரை பொலிஸார் தேடிக்கொண்டிருந்துள்ளனர்.

அதனையடுத்து, சந்தேகநபரான வர்த்தகர் அமில நுவான் அல்மோதா, மாரவில பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதனையடுத்தே அவர், கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தே ஏனைய நால்வரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான அமில நுவான் அல்மேதா என்பவர் பன்னல, மகாந்துர பிரதேசத்தைச் சேர்ந்த கொதிகலன் வர்த்தகராவார். நெவ் கபில என்றழைக்கப்படும் சீசர் கபில என்பவர், அமில நுவான் என்பவரிடம் இலட்சக் கணக்கில் பலவருட காலமாகக் கப்பம் பெற்று வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான வர்த்தகர் அமில நுவான் அல்மேதா, அந்தப் பிரதேசத்தில் உள்ள கைத்தொழிற்சாலைகளின் கொதிகலன்களுக்கு (பொயிலர்) விறகுகளை விநியோகிக்கும் குத்தகையாளராவார். அவருடைய தந்தை அதிர்ஷ்ட இலாபச்சீட்டுகளை விற்பனை செய்யும் பிரதிநிதியாவார்.

நெவ் கபில என்பவர், அந்த வர்த்தகரிடம் மாதமொன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் ஏழு மாதங்களாகக் கப்பம் பெற்றுள்ளார். வர்த்தகரும் அவருடைய தந்தையான அதிர்ஷ்ட இலாபச்சீட்டுகளை விற்பனை செய்யும் பிரதிநிதியும் அவ்வப்போது, அவருக்கு சுமார் 5 இலட்சம் ரூபாயைக் கப்பமாகக் கொடுத்ததாக, அவரளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற சில நாட்களுக்கு முன்னர் நெவ் கபில என்பவர், அந்த வர்த்தகரிடம் 70 ஆயிரம் ரூபாயை கப்பமாகக் கோரியுள்ளார். அவ்வாறு கப்பம் கொடுப்பதை நிறுத்துவதற்காகவே சந்தேகநபர், இக்கொலைகளை புரிந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று இரகசிய பொலிஸார் தெரிவித்தனர். கப்பமாகக் கேட்ட பணத்தைக் கொடுப்பதற்கு வர்த்தகரும், வாங்குவதற்கு நெவ் கபில என்பரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நெவ் கபிலவை தன்னுடைய வீட்டுக்கு வருமாறு வர்த்தகர் அழைத்துள்ளார். இதனையடுத்து, கடந்த 11ஆம் திகதி இரவு, நெவ் கபில, தன்னுடைய அடியாட்களுடன், வர்த்தகரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். வர்த்தக வீட்டிலோ, அன்றிரவு பெரும் விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்துபசாரத்துக்கு முன்னர், மதுபானமும் வழங்கப்பட்டிருந்தது. வந்திருந்த ஐவரும் தங்களுக்கு விரும்பியபடி, மது அருந்துவதற்கு வர்த்தகர் இடமளித்திருந்தார்.

ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த சகல வகையான மதுபானங்களையும் வர்த்தகர், வாரிவாரி வழங்கியுள்ளார். சகருக்கும் தலைக்கு மேல் போதை ஏறியிருப்பதை அறிந்துகொண்ட வர்த்தகர், நெவ் கபிலவிடம் பேச்சைக் கொடுத்துள்ளார். கப்பமாக கேட்ட 70 ஆயிரம் ரூபாய் தன்னிடம் தற்போதைக்கு இல்லை என்றும், 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

நெவ் கபிலவோ எவ்விதமான எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல் அந்தப்பணத்தை கப்பமாக பெற்றுக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துவிட்டார்;. இணக்கம் தெரிவித்ததன் பின்னர் ஒருநிமிடமேனும் தாமதிக்காத வர்த்தகர், பணத்தை எடுத்துத்தருவதாக, அவர்கள் அனைவரையும் விருந்துபசாரத்திலிருந்து நாசுக்காக வெளியே அழைத்துச்சென்றுவிட்டார். கொஸ்ஹேன சந்தைக்கே அவர்களை வர்த்தகர், அழைத்துச் சென்றுள்ளார்.

வானிலிருந்த வானொலியில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்த பாட்டுச்சத்தமும் காதைக் கிழித்துக் கொண்டிருந்ததாலும் போதை தலைக்கேறி இருந்தமையாலும் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமலே அவர்கள் இருந்துள்ளனர். தன்னுடைய கையாட்கள் நால்வருடன் வானில் சென்ற நெவ் கபில, கப்பத்தை பெற்றுக்கொள்வதற்காக வானிலிருந்து கீழே இறங்கிச்சென்று, பணத்தை பெறுவதற்கு கைகளை நீட்டியுள்ளார்.

ஏற்கெனவே இரும்பு கம்பியுடன் தயாராக இருந்த வர்த்தகர், நெவ் கபிலவின் தலையிலே நங்… நங்கெனப் போட்டுத் தாக்கியுள்ளார். போதையில் இருந்தபோதும் நெவ் கபில அவலக்குரல் எழுப்பியுள்ளார். எனினும், வானொலியிலிருந்து ஒலித்துக்கொண்டிருந்த பாடலின் சத்தம் காதைக் கிழித்துச்சென்றமையால், அவருடைய அவலக்குரலும் பாடலுடன் காற்றோடு கலந்துசென்றுவிட்டது.

பாடல் ஒலிக்க, அவலக் குரல் காற்றோடு கலந்தமையால், என்ன நடக்கின்றது என்று நெவ் கபிலவின் கையாட்களுக்குப் புரியவில்லை என்பதை அறிந்துகொண்ட வர்த்தகர், கையாட்கள் நால்வரையும் ஒவ்வொருவராக அழைத்து, மண்டையிலே நங்… நங்கென்று இரும்புக்கம்பியால் போட்டுத்தாக்கியுள்ளார். கப்பம் பெற்ற கைகள் ஒடிந்துவிட்டன. கேட்ட வாய் மௌனித்துவிட்டது. அடியாட்கள் மயான அமைதியடைந்துவிட்டனர்.

ஆனால், சடலங்களை தன்னால் தூக்கமுடியாது என்பதை வர்த்தகர் அறிந்துகொண்டார். அதன்பின்னர், தன்னுடைய வேலைத்தளத்தில் கடமையாற்றும் சேவையாளர்கள் நால்வரை, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அழைப்பித்துள்ளார். அவர்கள், சடலங்களை வானுக்குள் தூக்கித் தூக்கி போட்டுள்ளனர். சடலங்களைத் தாங்கிய வானை, அங்கிருந்து புஜ்ஜம்பொல, இரபடகம கொஸ்ஹேனவுக்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்குச் செலுத்திச்சென்றுள்ளனர்.

அவ்விடத்தில் வானை நிறுத்தி, சடலங்களின் மீது பெற்றோலை ஊற்றியுள்ளனர். அதன்பின்னர், சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நான்காவது சந்தேகநபர், தீக்குச்சியை உரசி, சடலங்களின் மீது வீசியுள்ளார். கருகிய நிலையில், சடலங்கள் ஐந்து மீட்கப்பட்ட இடத்தில் இரத்தக் கறைகள் படிந்திருந்தாலும் அவை இரத்தக் கறைகள் அல்ல என்பது, பிரதான சந்தேகநபரின் வாக்குமூலத்திலிருந்து தெளிவாகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலியாகியுள்ள நெவ் கபில என்ற நபர், தங்கொட்டுவ மற்றும் பன்னல பிரதேசங்களைச் சேர்ந்த வர்த்தகர்களை அச்சுறுத்தி, நீண்ட நாட்களாகவே கப்பம் பெற்றுவந்துள்ளார் என்று அறியமுடிகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். நாடளாவிய ரீதியில் பதியப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான நெவ் கபில மற்றும் அவருடைய அடியாட்களின் மீதிருந்த அச்சத்தின் காரணமாகவே, அமில நுவான் அல்மேதா, பொலிஸாரிடம் முறையிடவில்லை என்றும் அறியமுடிகின்றது.

LEAVE A REPLY