காத்தான்குடியில் சிறுமி துன்புறுத்தப்பட்ட விவகாரம்: இருவருக்கு விளக்கமறியல்

0
980

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையையும் தந்தையின் இரண்டாவது மனைவியையும் மார்ச் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா இன்று (14) உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வசிக்கும் சிறுமியொருவருக்கு அவளது தந்தையின் இரண்டாந் தாரமான பெண் நெருப்பால் சூடு வைத்ததாகவும், இதனால் சிறுமியின் உடம்பில் எரிகாயம் காணப்படுவதாகவும் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சிறுமியின் வீட்டுக்குச் சென்று சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் இரண்டாவது மனைவியிடமும் விசாரணை செய்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியையும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த காத்தான்குடிப் பொலிஸார் மேற்படி இருவரையும் நேற்று (13) கைது செய்திருந்தனர்.

சித்திரவதைக்குள்ளானதாகக் கூறப்பட்டுள்ள சிறுமியின் தாய் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

இதன் பின்னர், சிறுமியின் தந்தை மற்றுமொரு திருமணம் செய்த நிலையில் முதல் மனைவியின் இரண்டு பிள்ளைகளும் தந்தையின் இரண்டாவது மனைவியிடமே இருந்து வந்துள்ளனர்.

LEAVE A REPLY