ஹிஸ்புல்லா இயக்கத்துடன் தொடர்பு வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை: சவுதி அரசு அறிவிப்பு

0
221

ஹெஸ்புல்லா இயக்கத்துடன் தொடர்பு வைப்பவர்களுக்கு தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரசு அறிவித்துள்ளது.

ஹெஸ்புல்லா (Hezbollah) என்பது லெபனான் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் இயக்கமாகும். 1982ம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டுவரை தெற்கு லெபனானில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலிய படையினரை எதிர்த்துப் போராடவென உருவான இவ்வியக்கம், லெபனானின் அரசியல் கட்சியாகவும், ஆயுதமேந்திய போராளி இயக்கமாகவும் உள்ளது.

சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் மிக வேகமாக வளர்ந்துவரும் ஹிஸ்புல்லா இயக்கத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இங்கிலாந்தும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைத்துள்ளன. இந்நிலையில், ஈரானில் உள்ள ஷியா பிரிவினரால் வழிநடத்தப்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினருடன் அண்டைநாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்த அரசு அதிருப்தியாளர்கள் சமீபகாலமாக வலைத்தளங்கள் மூலமாக அதிகமான அளவில் தொடர்புகொண்டு வருகின்றனர்.

இது, சன்னி பிரிவைச் சேர்ந்த சவுதி மன்னரின் ஆட்சிக்கு எதிரான பெரும் போராட்டமாக உருவெடுக்கலாம் என அந்நாட்டின் அரசு கருதுகின்றது. எனவே, ஹிஸ்புல்லா இயக்கத்தினருடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சவுதி அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, சவுதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனானைச் சேர்ந்த ஷியா இயக்கமான ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்கள், அனுதாபிகள், ஆதரவாளர்கள், பொருளுதவி மற்றும் போக்குவரத்து வசதி செய்து தருபவர்கள் யாராக இருந்தாலும், நமது நாட்டின் கட்டுப்பாடு மற்றும் தீவிரவாத தடுப்பு சட்டங்களின்கீழ் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY