ஏறாவூர் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய பொறிமுறை அவசியம்: நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ்

0
341

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வர்த்தகர்களும், சிவில் பாதுகாப்புக் குழுக்களும், சமூகத் தலைவர்களும் பொலிஸாரும் இணைந்து புதிய பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றை அமுலாக்குவது அவசியம் என ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

ஏறாவூர் நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஞாயிறன்று ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் இடம்பெற்ற ஆராய்வுக் கூட்டத்தில் அவர் இதனை வலியுறுத்தினார்.

விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கூட்டத்திற்கு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழுள்ள ஏறாவூர் 4ஆம் 5ஆம் குறிச்சிகள், ஏறாவூர் நகர கடைத்தெரு மற்றும் ஏறாவூர்ப் பற்று, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தமிழ் முஸ்லிம் வர்த்தகர்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்கள், கிராம சேவையாளர்கள், பாடசாலை அதிபர்கள் சமூகத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய நிலையப் பொறுப்பதிகாரி மேலும் கூறியதாவது, பொதுமக்களின் பாதுகாப்பையும் இயல்பு வாழ்க்கையையும் உறுதிப்படுத்தும் வண்ணம் பொலிஸார் 24 மணிநேர கடமையில் அர்ப்பணிப்புடன் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

எனினும், இந்த விடயத்தில் பொதுமக்களும், வர்த்தகர்களும், சமூகத் தலைவர்களும் இப்போதிருப்பதை விட இன்னும் கூடுதலாக பொலிஸாரின் அர்ப்பணிப்புள்ள சேவைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலும் இடம்பெறுகின்ற திருட்டுக்கள், விபத்துக்கள், சமூக விரோதச் செயற்பாடுகளை ஒழிப்பதற்கு எந்நேரமும் கண்காணிப்புடன் இருப்பதற்கான பாதுகாப்புப் பொறிமுறை அவசியம்.

இதற்காக பொலிஸார் இன்னும் கூடுதலாக தங்களை அர்ப்பணித்துச் செயலாற்ற என்றும் ஆயத்தமாக இருக்கின்றார்கள்.

சமூக விரோதிகளின் செயற்பாடுகளை ஒழிப்பதில் பொலிஸார் மட்டும் அக்கறையாக இருந்தால் போதாது. அதற்கு பொதுமக்கள் பொலிஸாருக்கு முழுமையாக உதவ வேண்டும்.

அதேபோன்று பொதுமக்கள் தங்களது அசையும் அசையாச் சொத்துக்களை கவனமாகப் பாதுகாப்பது போல அடுத்தவருடைய உடமைகளையும், அரசாங்கத்தின் உடமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

முக்கியமாக பெறுமதியான தங்க நகைகள், பெறுமதியான பொருட்கள் என்பனவற்றை கடைகளில் பாதுகாப்பு என்று கருதி கடைகளில் வைக்க வேண்டாம். அவற்றை பொருத்தமான பாதுகாப்பு இடங்களில் வைப்பதே சிறப்பானது என்றார்.

DSC02352 DSC02363 DSC02370

LEAVE A REPLY