இந்தியாவை வீழ்த்தியது தென் ஆபிரிக்கா

0
268

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக சூப்பர்-10 சுற்றில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு வசதியாக பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசிம் அம்லா 5 ரன்னிலும், கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் 12 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து டுமினி, குயின்டன் டி காக்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார்கள்.

அணியின் ஸ்கோர் 12 ஓவர்களில் 110 ரன்னாக உயர்ந்த போது குயின்டன் டி காக் 33 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் காயத்தால் ஓய்வு பெற்றார். அடுத்து களம் கண்ட டேவிட் மில்லர் 18 ரன்னிலும், ரோசவ் 11 ரன்னிலும், டேவிட் வைஸ் ரன் எதுவும் எடுக்காமலும், கிறிஸ் மோரிஸ் 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று ஆடிய டுமினி 44 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பெஹர்டைன் 5 ரன்னில் ரன்-அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. கைல் அப்போட், ஆரோன் பாங்கிசோ ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 73 ரன்னும், சுரேஷ்ரெய்னா 41 ரன்னும் எடுத்து ஓய்வுக்காக வெளியேறினார்கள்.

யுவராஜ்சிங், கேப்டன் டோனி ஆகியோர் கடைசி வரை நின்று வெற்றிக்காக போராடியும் பலன் கிடைக்கவில்லை. கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டோனி 30 ரன்னுடனும், யுவராஜ்சிங் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

முன்னதாக நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மும்பையில் நேற்று சந்தித்தன. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் கனே வில்லியம்சன் 63 ரன்கள் (39 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாசன் ராய் 55 ரன்களும் (36 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), அலெக்ஸ் ஹாலெஸ் 44 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

LEAVE A REPLY