நடந்தது என்ன? மரியா ஷரபோவா எழுதிய உருக்கமான கடிதம்

0
72

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, தன்னுடைய ஃபேஸ்புக்கில் ரசிகர்களுக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஊக் மருந்து சோதனையில், ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை எடுத்துக்கொண்டதாக அவர் விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மரியா ஷரபோவா, தன் டென்னிஸ் ரசிகர்களுக்கு வலைதளம் மூலமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

“என்னுடைய ரசிகர்களுக்கு,

ஊடகங்களில் தவறாகக் கையாளப்பட்ட சில விடயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஊக்கமருந்து விவகாரத்தால் விளையாட தடை ஏற்பட்டபோது, உங்களில் ஏராளமானோர் எனக்கு ஆதரவு அளித்தீர்கள். அதற்கு எப்போதும் நன்றி உடையவளாக இருப்பேன்.

அதநேரத்தில் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிய சில தவறான, ஆதாரமற்ற தகவல்களை நான் மறுக்கிறேன்.

தடையை ஏற்படுத்தும் மருந்துகள் குறித்து, எனக்கு ஐந்து முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையில்லை.

நான் தடை செய்யப்பட்ட மருந்து குறித்து தெரியாமல் இருந்ததை நியாயப்படுத்தவில்லை.

ஏற்கெனவே டிசம்பர் 22, 2015ல் வந்திருந்த மின்னஞ்சல் குறித்துக் கூறியிருக்கிறேன்.

அதில் “2016ம் ஆண்டின் டென்னிஸ் ஊக்க மருந்து எதிர்ப்புத் திட்டத்தின் முக்கிய மாற்றங்கள்” குறித்தே கூறப்பட்டிருந்தது. ஆனால் அதை படிப்பதில் நான் சற்று அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

டிசம்பர் 18ம் திகதியன்று, ‘வீரர் செய்திக்குறிப்பு’ என்ற பெயரில் எனக்கு மின்னஞ்சல் வந்தது. அதில் ஏராளமான பயணங்கள் குறித்த செய்திகளுடன் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து குறித்த செய்தியும் இருந்தது.

அந்த மெயிலில் இருந்த தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து குறித்த தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் தேவையில்லாத யூ.ஆர்.எல். (URL) இணைப்புகளைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

அதில் ‘வீரர் பகுதி’ லிங்கைச் சொடுக்கி, பயனர் பெயர், கடவுச் சொல்லை உள்ளீடு செய்யவேண்டும். அதற்குப் பின்னர், திறந்து இரண்டு பக்கங்களைக் கடந்து, தடை செய்யப்பட்டிருக்கும் மருந்துகள் குறித்த புதிய தகவல்களைப் படிக்க வேண்டும்.

இதைத்தான் பெரும்பாலான ஊடகங்கள், எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறுகின்றன என்று நினைக்கிறேன்.

ஊக்கமருந்துத் தடை அமல்படுத்தப்பட்ட பிறகு, 2016ன் தொடக்கத்தில் நடந்த வெவ்வேறு போட்டிகளில், வாலட் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.

இக்கடிதத்தோடு நான் இணைத்திருக்கும் அந்த ஆவணத்தைப் பார்த்தீர்கள் என்றால், நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு புரியும்.

திரும்பவும் சொல்கிறேன், என் செயலை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் நான் ஐந்து முறை எச்சரிக்கை செய்யப்பட்டேன் என்று கூறுவது பொய்யான கருத்து.

ஒரு கட்டுரையின் தலைப்புச் செய்தியில், ‘மரியா ஷரபோவாவின் போதை மருந்துக்கான 4-6 வார இயல்பான சிகிச்சை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் நான் எடுத்துக் கொண்டிருந்த மருந்தின் தயாரிப்பாளர் சொன்ன விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அது, ”சிகிச்சைக்கான மருந்துகளை வருடத்துக்கு இரண்டு முறையோ, மூன்று முறையோ மட்டும்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தகுந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில், நோயாளியின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டே மெல்டோனியம் மருந்தைப் பயன்படுத்த வேண்டும்” என்பதாகும்.

நான் தினந்தோறும் அந்த மருந்தை எடுக்கவில்லை. என்னுடைய மருத்துவரின் அறிவுரையின் பேரில், பரிந்துரைக்கப்பட்ட மிகக்குறைவான அளவிலேயே எடுத்துக்கொண்டேன்.

இதுவரை நான் நேர்மையாகத்தான் இருந்திருக்கிறேன். சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக, நான் காயமடைந்ததைப் போல நடிக்கவில்லை.

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறேன். அவர்கள் என்னை திரும்பவும் விளையாட அனுமதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

எது என்னவாக இருந்தாலும், என்னுடைய ரசிகர்களாகிய நீங்கள், உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

மரியா ஷரபோவா கடந்த 10 ஆண்டுகளாக மெல்டோனியம் என்ற மருந்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அவரது குடும்பத்தின் பரம்பரை நோயான நீரிழிவு நோய் ஷரபோவாவுக்கும் உள்ளது.

இதனாலே அவருக்கு மருத்துவர் இந்த மருந்தை பரிந்துரை செய்துள்ளார். அதுவே இப்போதைய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

LEAVE A REPLY