புலிகளிடமிருந்து மீட்ட தங்கம்: பொன்சேகாவின் கருத்துக்கு பசில் மறுப்பு

0
209

இலங்கையின் இறுதிக் கட்டப் போரின்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கத்தில் ஒருபகுதி கையாடல் நடந்துள்ளது என்ற அர்த்தத்தில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பொருளாதாரத் துறை அமைச்சருமான பசில் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதற்காக, தமிழர்களை தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட வைப்பதற்காக மஹிந்த தரப்பால் புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் பசில் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

இது சரத் பொன்சேக்காவின் சொந்தக் கருத்து அல்ல என்று தெரிவித்த பசில் ராஜபக்ஷ, இனிவரும் காலத்தில் தமக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடு என்றும் தான் அவரின் இந்த கருத்துக்கள் எனவும் அவர் கூறினார்.

‘புலிகள் தங்க நகைகளை முறையான சட்டத்திட்டங்களுக்கமைய வைத்திருக்கவில்லை. பயங்கரவாதிகளிடமிருந்து எடுக்கப்பட்ட நகைகளை மீண்டும் பயங்கரவாதிகளிடம் கொடுக்க முடியுமா என்பது தொடர்பில் சட்டம் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. விசாரணை நடத்துபவர்கள் ஒரு முடிவை எடுப்பார்கள்’ என்றார் பசில் ராஜபக்ஷ.

2005-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, மகிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதற்காக புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு பற்றியும் பிபிசி அவரிடம் கேட்டது.

‘இதுவும் ஒரு பொய்யான குற்றச்சாட்டு. சரத் பொன்சேக்காவுடன் நான் ஒருபோதும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசியது இல்லை. அவர் கூறுவது போல எந்த ஒரு பணப்பரிமாற்றமும் நடக்கவில்லை. பெரும்பாலும் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக இராணுவத்திற்குள் எழுந்த பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பிலேயே, நான் அவருடன் அதிக தடவைகள் பேசியுள்ளேன்’ என்றார் முன்னாள் அமைச்சர்.

நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் பொறுப்பேற்ற பின்னர், நேற்று நாடாளுமன்றத்தில் முதல் உரையை ஆற்றிய அமைச்சர் சரத் பொன்சேக்கா, தான் இராணுவத் தளபதியாக இருந்து போரை வழி நடத்தியபோது புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

போர் முடிவுக்கு வந்து இரண்டு வாரங்களில் மட்டும், 220 கிலோவுக்கு அதிகமான நகைகள் மீட்கப்பட்டதாகவும், அந்த நகைகளில் உரிமையாளர்களின் விபரங்கள் எழுதப்பட்டிருந்ததாகவும் பொன்சேகா கூறியிருந்தார்.

-BBC-

LEAVE A REPLY