பயிற்சி போட்டியிலும் தோல்வி! இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து

0
406

டி20 உலகக்கிண்ண பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த மற்றொரு பயிற்சிப் போட்டியில் இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இலங்கை அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த நியூசிலாந்து 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 226 என்ற இமாலய ஓட்டங்களை எட்டியது.

அதிகபட்சமாக கோலிங் முன்ரோ 34 பந்தில் 67 ஓட்டங்களும் (7 சிக்சர்), ஆண்டர்சன் 29 பந்தில் 60 ஓட்டங்களும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர்.

தவிர, குப்தில் 41 ஓட்டங்களும், எலியாட் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களும் குவித்தனர். இலங்கை அணி தரப்பில், தசுன் ஷனாக 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 227 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இலங்கை அணி இறங்கியது. தொடக்க வீரர் டில்ஷான் (0), சந்திமால் (8) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

திரிமன்னே 41 ஓட்டங்களும், கபுகெடெரா 38 ஓட்டங்களும் எடுத்தனர். அணித்தலைவர் மேத்யூஸ் (25), சிறிவர்த்தனே (15) ஓரளவு ஓட்டங்கள் குவித்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களே எடுத்த நிலையில், அந்த அணியால் 20 ஒவர் முடியில் 7 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் 74 ஓட்டங்களால் இலங்கை தோல்வியைத் தழுவியது.

நியூசிலாந்து அணி தரப்பில், மில்னே 3 விக்கெட்டுகளும், இஷ் சோடி 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்.

LEAVE A REPLY