வெளிவிவகார அமைச்சரை விட அதிகமான பயணங்கள் யோசித்த மேற்கொண்டுள்ளார்

0
223

யோஷித்த 27 தடவைகள் வெளிநாடு பயணம் பிணையில் வந்த பின்னர் விசாரணை அரசியல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ கடற்படையின் லெப்டினனாக கடமையாற்றியிருந்த காலப் பகுதியில் 27 தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருப்பதாக பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர் பிணையில் வெளியில் வந்த பின்னர் மேற்படி வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், உரிய தகைமை இல்லாமல் இவர் வெளிநாட்டு பயிற்சிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்காக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

2009-,2010 காலப் பகுதியில் உக்ரெய்ன் தேசிய பாதுகாப்புக் பல்கலைக்கழகத்தின் பயிற்சி பெறுவதற்காக யோஷித்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டது குறித்து நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி கேள்வியெழுப்பியிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இவர் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு பயிற்சிக்காச் சென்றிருக்கிறார். 2008 மார்ச் மாதத்தில் அமெரிக்காவுக்கு இராணுவப் பயிற்சிக்காகச் சென்றிருக்கும் அவர் 2008ஆம் ஆண்டு முதல் 2014 வரை 12 தடவைகள் உக்ரேய்னுக்கு பயிற்சிக்காக சென்று வந்திருக்கிறார்.

2012ல் ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள இவர், 2013ஆம் ஆண்டு ஓகஸ்டில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். ரக்பி போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இவர் 2014 மார்சில் ஹொங்கொங்கிற்கும், அவ்வாண்டு ஏப்ரலில் கொரியாவுக்கும், மே மாதத்தில் ஜப்பானுக்கும், செப்டெம்பரில் மலேசியா மற்றும் கொரியாவுக்கும், 2010 ஏப்ரலில் சிங்கப்பூருக்கும் சென்று வந்துள்ளார்.

இது தவிர தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு 2009 ஜூனில் மியன்மாருக்கும், 2015ல் ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் யோஷித்த ராஜபக்ஷ சென்று வந்துள்ளார்.

துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக இவர் 2013 பெப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கும் சென்று வந்துள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதியே இவரை உக்ரேய்ன் பயிற்சிக்குத் தெரிவு செய்துள்ளார். யோஷித்த ராஜபக்ஷ தற்பொழுது கடற்படையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதும் மேற்படி வெளிநாட்டு விஜயங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது இடையீட்டுக் கேள்வியை எழுப்பிய நளிந்த ஜயதிஸ்ஸ, நூறு மாதங்கள் கடற்படை சேவையில் யோஷித்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சரைவிட வெளிநாட்டுப் பயணங்கள் சென்று வந்திருப்பதாகக் குறிப்பிட்டார். உக்ரேய்ன் தூதுவராக இருந்த யோஷித்தவின் மாமா, அவரின் பெயரை பரிந்துரைத்து அனுப்புகையில் இங்கு பாதுகாப்பு செயலாளராகவிருக்கும் சித்தப்பா அதற்கு அங்கீகாரம் வழங்கும் நிலை காணப்பட்டது. இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.

LEAVE A REPLY