முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமின் தலைமையில் சவூதி அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந தூதுக் குழுவினர் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டு நேற்றுக்காலை நாடு திரும்பினர்.
இலங்கை முஸ்லிம்களில் பெரும் தொகையினர் ஹஜ் கடமைக்காக பல வருடங்களாக காத்திருப்பதாகவும் அதனால் ஹஜ் கோட்டாவை இவ்வருடம் குறைந்தது 4000 ஆக அதிகரித்து தரும்படி அமைச்சர் ஹலீம் சவூதி ஹஜ் துறை அமைச்சர் கலாநிதி பந்தர் பின் முஹம்மட் அல் ஹஜ்ஜாரை வேண்டியுள்ளார்.
சவூதி ஹஜ் துறை அமைச்சரிடம் கோட்டா அதிகரிப்பைக் கோரியிருப்பதாகவும் அது மன்னரின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்னரே உறுதிப்படுத்தப்படுமெனவும் இலங்கைக்கு இவ்வருடம் 4000 கோட்டா கிடைக்குமென தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஹலீம் ‘விடிவெள்ளி’ க்குத் தெரிவித்தார்.
சவூதி ஹஜ்துறை அமைச்சர் கலாநிதி பந்தர் பின் முஹம்மட் அல்ஹஜ்ஜார், தெற்காசிய நாடுகளுக்கான ஹஜ்துறை தலைவர் ராபத் பத்ர், மற்றும் மதீனாவில் கலாநிதி ஹாதம் ஜாபர் ஆகியோருடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முஅல்லிம்களை பதிவு செய்தல், மினா, அரபாவில் தங்குவதற்கான கூடார வசதிகள், மக்காவிலிருந்து மதீனாவுக்கான போக்குவரத்து வசதிகள், உழ்ஹிய்யா ஏற்பாடுகள் என்பன தொடர்பாக இந்த உடன்படிக்கைகள் அமைந்திருந்தன.
தூதுக்குழுவில் இடம்பெற்ற ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி சியாத் தாஹாவைத் தொடர்பு கொண்டு விபரம் வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
‘சவூதி ஹஜ்துறை அமைச்சரிடம் கடந்த வருடம் இலங்கை ஹஜ் பயணிகள் எதிர்கொண்ட சில பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துக்கூறினோம். இலங்கை ஹஜ் பயணிகளுக்கு மக்காவிலிருந்து மதீனா பயணிப்பதற்கு குளிரூட்டப்பட்ட பஸ் வண்டிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர் என்று முறையிட்டோம்.
இவ்வருடம் புதிய 3000 குளிரூட்டப்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பழைய பஸ்கள் சேவையிலிருந்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மற்றும் கடந்த வருடம் உழ்ஹிய்யாவுக்காக ஒரு மிருகத்துக்கு 490 சவூதி ரியால் அறவிடப்பட்டது. இவ்வருடம் அது 460 ரியால்களாக குறைக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறினார்.
இவ்வருடம் தகவல் தொழில்நுட்பம் ஹஜ் ஏற்பாடுகளில் கையாளப்படவுள்ளது.
இதனால் சிறந்த சேவை கிடைக்கப்பெறும் என்றார்.
இலங்கை குழுவில் அமைச்சர் ஹலீமுடன் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, ஹஜ் குழு தலைவர் கலாநிதி சியாத்தாஹா, அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி எம்.எம். ரமீம், சவூதிக்கான இலங்கை தூது வர் தாஸீம், ஹஜ் முகவர்கள் தலைவர் எம்.எஸ்.எம். பாரூக் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-Vidivelli-