வேற்றுமைப்பட்டுள்ள மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவது இரத்தமாகும். -இம்ரான் எம்.பி

0
418

(அஹமட் இர்ஷாட்)

மனிதர்களிடையே இன மத சாதி வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றுக்கப்பால் அவர்களை ஒற்றுமைப்படுத்துவது இரத்தமே என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

வெள்ளைமணல் சனசமூக நிலையத்தினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தானங்களில் சிறந்தது இரத்த தானமாகும். ஏழையோ பணக்காரனோ அதேபோல ஆணோ பெண்ணோ ஆரோக்கியமுள்ள சகல மனிதர்களாலும் செய்யக்கூடிய ஒரே தானம் இதுவாகும். ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக செய்யப்படும் தானம் இது.

இன்று தினமும் பல்வேறு விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதேபோல பல்வேறு வகையான சத்திரசிக்கிச்சைகள் நாளாந்தம் எல்லா வைத்தியசாலைகளிலும் இடம்பெறுகின்றன. இதனைவிட தலசீமியா ஹீமோபிலியா போன்ற இரத்தச் சோகை நோயுள்ளவர்களும் இருக்கிறார்கள். இந்தவகையில் நாளாந்தம் அதிக இரத்தம் தேவைப்படுகின்றது.

எனவே இவற்றுக்காக நாளாந்தம் இரத்த தானங்களைப் பெற்று சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்த வகையில் பொதுமக்களை விழிப்பூட்டி இரத்த தானங்களை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்காக சமூக மட்ட அமைப்புக்களின் பங்களிப்பு அவசியம் தேவைப்படுகின்றது.

பொதுமக்களில் சிலருக்கு இரத்த தானம் தொடர்பாக தேவையற்ற பயம் உள்ளது. இது போக்கப்பட வேண்டும். ஆரோக்கியமான மனிதனிடத்தில் 5 முதல் 6 லீற்றர் வரை இரத்தம் உள்ளது. இதில் சிறிய வீதமே தானமாகப் பெறப்படுகின்றது. இது இரண்டொரு வாரங்களில் மீள் நிரப்பப்பட்டு விடும்.

இன்று இந்த இரத்த தானத்தை ஏற்பாடு செய்துள்ள சனசமூக நிலையத்தினருக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பணியை தொடர்ச்சியாக செய்து வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் முதலில் இரத்ததானம் வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

IMG-20160305-WA0026 IMG-20160305-WA0030

LEAVE A REPLY