அனுபவ அறிவை அடுத்தவர்களுக்குப் பகிர்ந்து கொள்வதனூடாக இந்த அகிலம் உயிர் பெறும்

0
298

-கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 4 வது சர்வதேச மாநாட்டில் உபவேந்தர் கலாநிதி ரீ. ஜயசிங்கம்-

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

‘அனுபவ அறிவை அடுத்தவர்களுக்குப் பகிர்ந்து கொள்வதனூடாக இந்த உலகம் உயிர் பெறும்;’ என கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 4 வது சர்வதேச மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோது உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.

‘ஒருங்கிணைவுக்கு ஊடாக அறிவை விருத்தி செய்தல்’ எனும் தொனிப்பொருளில் கிழக்குப் பல்கலைக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 4 வது சர்வதேச மாநாடு வியாழக்கிழமை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் மனிதவளமும் சமூகவியல் விஞ்ஞானமும், விவசாயமும் உணவுப் போஷாக்கும், சௌக்கியப் பராமரிப்பும் விஞ்ஞானமும், வர்த்தக தொழில் முயற்சியாண்மை, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயதானங்களில் ஆய்வும் அறிவுப் பகிர்வும் இடம்பெறவுள்ளது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய உபவேந்தர் ஜயசிங்கம் மேலும் தெரிவித்ததாவது, பாமரனாக இருந்தாலும் படிப்பறிவுள்ளவராக இருந்தாலும் ஒருவரின் பட்டறிவு அனுபவம் என்பது விஞ்ஞான பூர்வமானதாகவும் பெறுமதி வாய்ந்ததாகவும் இருக்கின்றது.

ஆனாலும், இத்தகைய அனுபவ அறிவைப் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையிலும், குழுவாகவும், நிறுவன ரீதியாகவும், பல்கலைக் கழகங்கள் இடையிலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதற்கான தளம் என்பதும் அத்தகைய ஒரு திறந்த கலாச்சாரம் இல்லாதிருப்பதும் ஒரு பெருங்குறையாக இருந்து வருகின்றது.

இந்தக் குறையைப் போக்குவதற்காக சமகாலத்தில் பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த அனுபவப் பகிர்வுப் பயணத்தில் கிழக்குப் பல்கலைக் கழகமும் பங்கெடுத்துள்ளது.
இது ஒரு வரலாற்று முயற்சியாகும்.

இந்த அனுபவ அறிவு, இன மத மொழி பேதங்களையும், நாடுகளையும் கடந்து பகிர்ந்து கொள்ளப்படுவது மிக முக்கியமானதாகும்.

மனித இனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்தமான இந்தப் பிரபஞ்சத்தின் புரிதலுக்கும் பிரபஞ்சத்தைப் புதுப்பிப்பதற்கும், புத்தாக்கத்தைப் படைப்பதற்கும் எல்லைகளையும் வேறுபாடுகளையும் கடந்து அனுபவ அறிவை வியாபித்து பரப்புவது நன்மை பயக்கும்.

எமக்கு முன்னுள்ளவர்களின் அறிவை நாம் ஏடுகளிலும் ஏனைய ஆவணங்களிலும் வைத்துக் கொண்டு பயன்படுத்துவதைப் போல சமகாலத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் பிரசன்னமாகியிருக்கும் நமது அறிவையும் எதிர்கால சந்ததி பயன்படுத்துவற்கு ஏற்றமாதிரியான ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்.

இந்த மாநாட்டின் மூலமும் பாரிய உலக அறிவைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சி எதிர்காலத்தில் எமக்கு ஒரு தளத்தை ஏற்படுத்தும் என்றார்.

கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் கொழும்புப் பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் சுனில் சந்திரசிறி, கிழக்குப் பல்கலைக் கழக பயிராக்கவியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் மாநாட்டின் இணைத் தலைவருமான கலாநிதி தயாமினி ஹெரால்ட் சேரன், கிழக்குப் பல்கலைக் கழக ஆங்கில மொழித்துறைத் தலைவரும் மாநாட்டு இணைத் தலைவருமான கலாநிதி ஜே. கென்னடி, மற்றும் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சறோஜினிதேவி மகேஸ்வரநாதன் உட்பட விரிவுரையாளர்கள், துறைத் தலைவர்கள், ஆய்வாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு பல்கலைக் கழக வெளியீடுகளின் பதிப்பாசிரியர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

DSC02184 DSC02188 DSC02198

LEAVE A REPLY