புன்னியாமீன் மறைவுக்கு முஸ்லிம் மீடியாபோரம் அனுதாபம்

0
170

அதிக நூல்களை எழுதி சாதனை புரிந்த பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பீ.எம். புன்னியாமீனின் மறைவு எழுத்துத் துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் தெரிவித்துள்ளது.

மூத்த எழுத்தாளர் புன்னியாமீன் காலமானதையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்தின் சார்பில் அதன் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்தியில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

பிரபல எழுத்தாளரும் பன்னூலாசிரியரும் உடத்தலவின்னை சிந்தனை வட்டத்தின் தலைவருமான பீ.எம். புன்னியாமீன் காலமான செய்தி அறிந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது. அவரது அன்புத் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் மீடியாபோரம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

பலரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் சுமார் 170 நூல்களை தமிழ் மொழியில் எழுதி வெளியிட்டிருக்கும் புன்னியாமீன் ஒரு சிறந்த சிறுகதாசிரியரும்கூட. 160 சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர், பல் நூற்றுக்கணக்கான சமூக இலக்கிய அரசியல் திறனாய்வு கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

மீடியாபோரத்தின் மூத்த அங்கத்தவரான இவர், ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளரும்கூட. மீடியாபோரத்தின் சிறப்பு விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டிலுள்ள ஊடக, கலை இலக்கியவாதிகளில் நூற்றுக்கணக்கானோரை நவமணியின் அநுசரணையுடன் அறிமுகம் செய்து அவற்றை 15 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்.

ஆசிரியராகவும் அதிபராகவும் மத்திய மாகாண கலை, கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றிக்கொண்டே முழுநேர ஊடகவியலாளராகவும் பணிபுரிந்து வந்தார். 55 வயதில் காலமான புன்னியாமீன் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதி கிடைக்க ஸ்ரீ.மு.மீடியாபோரம் இறைவனை இறைஞ்சுகின்றது.

LEAVE A REPLY