நாமல் ராஜபக்ஷ உட்பட 8 பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

0
145

நிதி மோசடி தொடர்பான சட்ட வரையறைகளை மீறிய குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட எட்டுப் பேர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவால் ஊழல் எதிர்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷவால் சட்டவிரோதமாக பெறப்பட்ட 15 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதாக குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாமல் ராஜபக்ஷ தவிர்த்து இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஏழு பேரதும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், சம்பந்தப்பட்ட ஏழு பேரதும் வெளிநாட்டு பயணங்கள் மற்றும் குறித்த நிறுவனத்துக்கு சொந்தமான 4 வங்கிக் கணக்குகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக குறிப்பிட்ட அவர், அன்றையதினம் வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துமாறும் கூறினார்.

LEAVE A REPLY