டி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்று: நெதர்லாந்தை வீழ்த்தியது வங்காளதேசம்

0
174

20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதன் தகுதி சுற்று ஆட்டத்தில் 8 அணிகள் பங்கேற்று உள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஆங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் முதன்மை சுற்றுக்கு (சூப்பர் 10) தகுதி பெறும்.

‘பி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டங்களில் ஜிம்பாப்வே அணி 14 ரன் வித்தியாசத்தில் ஆங்காங்கையும், ஆப்கானிஸ்தான் 14 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தையும் தோற்கடித்தன.

2–வது நாளான இன்றும் 2 ஆட்டங்கள் நடக்கிறது. முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 10–வது இடத்தில் இருக்கும் வங்காள தேசமும் 12–வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தும் மோதின. வங்காளதேச அணி சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் இலங்கை, பாகிஸ்தான் போன்ற முன்னணி அணிகளை வீழ்த்தி இருந்தது. எனவே நெதர்லாந்தை எளிதில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் களமிறங்கியது.

டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீச முடிவு செய்தது. வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் அதிரடியாக ஆடி 58 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். சர்க்காரும், ரகுமானும் தலா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் வங்காளதேச அணி 7 விக்கெட்களை இழந்து 153 ரன்கள் எடுத்து.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி வீரர்களால் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீபன் மற்றும் கேப்டன் பீட்டர் போரன் ஆகியோர் மட்டும் தலா 29 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதனால், 20 ஓவர் முடிவில் நெதர்லாந்து 7 விக்கெட்களை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து, 8 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வங்காளதேச தரப்பில் அல் அமின் மற்றும் அல் ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

ஆட்டநாயகனாக தமீம் இக்பால் தேர்வு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY