அகதிகள் பதற்றத்தை தணிக்க துருக்கி, ஐரோப்பா இணக்கம்

0
134

குடியேறிகள் விவகாரத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணிக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையில் பிரசல்ஸில் நடந்த மாநாட்டில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி கிரேக்கத்தை வந்தடையும் முறையற்ற தஞ்சக்கோரிக்கையாளர்கள் துருக்கிக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் டொனால்ட் டஸ்க் குறிப்பிட்டார்.

இவ்வாறு துருக்கிக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு சிரிய தஞ்சக்கோரிக்கையாளர்களையும் ஐரோப்பிய ஒன்றியம் சிரிய அகதியாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தும் துருக்கி, அதற்காக மேலும் நிதி உதவிகளை கோருகிறது.

இதன்போது மேலதிகமாக மூன்று பில்லியன் யூரோக்களை துருக்கி கோரியுள்ளதாக, ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் மார்டின் ஸ்குல்ஷ் தெரிவித்துள்ளார்.

அகதி தஞ்சம் மறுக்கப்பட்ட, துருக்கியர்கள் அல்லாதவர்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கும், தனது கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் துருக்கி முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு தரப்புக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டிருக்கும் விவகாரம் தொடர்பில் மார்ச் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பா தற்போது மிகப்பெரிய அகதி பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளது. ஐரோப்பாவை நோக்கி வரும் பெரும்பாலான அகதிகள் துருக்கி வழியாகவே ஐரோப்பாவை அடைகின்றனர். சிரிய உள்நாட்டு யுத்தத்தால் துருக்கியில் ஏற்கனவே 2.7 மில்லியன் அகதிகள் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY