பெண் வன்முறைகளுக்கு துரித நீதி கோரி மட்டில கவனயீர்ப்புப் போராட்டம்

0
164

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு துரித நீதி கோரியும் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தேசிய பிரச்சினையாக பிரகடனப்படுத்தக் கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் அமைப்புக்களும் பெண்கள் செயற்பாட்டாளர்களும் இணைந்து நேற்று 08 செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இடம்பெற்ற மேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்தில் மட்டக்களப்பிலுள்ள பெண்கள் அமைப்புக்கள்,பெண்கள் செயற்பாட்டாளர்கள்,பல்கலைக்கழக மாணவிகள் என பலர் கலந்து கொண்டதுடன் அவர்கள் ‘பெண்களுக்கெதிரான வன்முறைகள் எமது சமூகத்தில் நிகழ அனுமதிக்க மாட்டோம்’,’பெண்கள்,சிறுவர்களுக்கெதிரான வன்முறைக்கு துரித நீதி வேண்டும்’ ,’பெண்களுக்கெதிரான வன்முறையாளராக எமது ஆண்கள் மாற அனுமதிக்க மாட்டோம்’ ,’கௌரவ ஜனாதிபதி அவர்களே! பெண்கள் சிறுபிள்ளைகளுக்கெதிரான பாலியல் வன்முறையை தேசிய பிரச்சினையாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும்’, ‘கௌரவ ஜனாதிபதி அவர்களே! சட்டமா அதிபர் திணைக்களத்தில் தேங்கியுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் வன்முறை தொடர்பான வழக்குகள் உடனடியாக விசாரணைக்கு வரும் வகையில் விஷேட சட்டத்தரணிகள் குழு அமைக்கப்பட வேண்டும்’ , ‘பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு சரியான நீதி கிடைக்கும் வரைக்கும் நாம் ஓய மாட்டோம்’ போன்ற தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை மகளிர் தினமான இன்று 08 முதல் இம்மாதத்தை இருண்ட பங்குனி மாதமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு ஆடை அணந்திருந்ததுடன் கறுப்புக் கொடிகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

7be9189a-a581-4a0d-a22a-56f21a4f02e5 9a969f7b-005c-4604-a9e5-40afa99bf61d 9d19beb9-6228-436b-bab6-bf936dcf153f 57e86763-ae92-4bae-8158-eae66a16feae 61c2221c-cb61-47ef-bf03-aeb2a26513c9 5358027f-9558-4362-9954-3a0ba6cc08e6 9064216c-cce6-4a89-a644-9328c09f10f8 ddcaf14a-c6b3-4791-a8f0-26814eaca276 ece12f6d-efb8-4401-9411-c3919da4c2ed fb58048b-1427-4ad5-ae9a-b658f4fee18e

LEAVE A REPLY