டி20 உலகக் கிண்ணத்தை வெல்ல இந்தியாவிற்கே அதிக வாய்ப்பு: நியூசிலாந்து கேப்டன்

0
176

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கிவிட்டது. தற்போது தகுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சில முக்கிய அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 15-ந்தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சிக்குப் பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது வில்லியம்சன் கூறும்போது ‘‘இந்த தொடரில் பொதுவாக இந்தியா ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது. அதே சமயத்தில் ஒவ்வொரு அணியும் இந்த தொடரை வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கையோடு இங்கே வந்துள்ளன.

இந்திய அணிக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். டி20 போட்டியில் அவர்களை வெல்வது மிகவும் கடினம். போட்டியை வெற்றிபெற வைக்கும் வகையில் ஏராளமான வீரர்கள் உள்ளனர். குறைந்த ஓவர்களை கொண்ட டி20 போட்டியில் தனியாகவும், கூட்டாகவும் அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். இதனால் அவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

முதல் போட்டியிலேயே இந்தியாவிற்கு எதிராக நாங்கள் விளையாட இருக்கிறோம். இது மிகவும் கடினமாக இருக்கும். இந்திய சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடும் வகையில் நாங்கள் தயாராக வேண்டும். முதல் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடினால், அது இந்த தொடரில் முன்னோக்கிச் செல்ல சிறந்ததாக இருக்கும்’’ என்றார்.

LEAVE A REPLY