(Video) 25 வருட காலமாக புனரமைக்கபடாத ஹொரவப்பொத்தானை வீரச்சோலை வீதி

0
231

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

ஹொரவப்பொத்தானை மற்றும் வீரச்சோலை உள்ளுூர் வீதி கடந்த 25 வருடங்களாக முறையாகப் புணரமைக்கப் படாமையால் அப்பிரதேச மக்கள் கடும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

ஹொரவப்பொத்தானை பிரதேச சபைக்குட்பட்ட மாவத்தாவை, அலிகிம்புலாகலை, திம்பிரயத்தாவை, ஆணை விழுந்தான், பத்தாவை, வீரச்சோலை உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.

தொடர்ச்சியான வெள்ளம், சீரற்ற பாதைப் பராமரிப்பு மற்றும் அரசாங்க அதிகாரிகளின் அசமந்தப் போக்கு உள்ளுர் அரசியல் வாதிகளின் உதாசீனம் ஆகியவற்றால் இப்பதை கவனிப்பார் அற்றுக் கிடக்கின்றனது.

கடந்த இரண்டு வாரங்களாக இப்பாதையால் பஸ் போவதில்லை. இதனால் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். சில நேரம் பாடசாலை மாணவர்கள் கால்நடையாக நீண்ட நேரம் நடந்து செல்ல வேண்டியுள்;ளது. சில வேளை மாணவர்கள் பாடசாலைக்கு மழைக்குள் செல்ல முடிவதில்லை.

சிலபோது பாடசாலைக்கு செல்லாமல் விடுவதும் உண்டு. பஸ் போக்குவரத்து தடைப்பட்டதன் பின்னர் லொறியொன்றில் பாடசாலைக்குச் செல்ல முற்பட்ட மாணவர்கள் சிலர் லொறி புரண்டு விபத்துக்கு உள்ளாகினர். சில மாணவர்கள் இன்னும் சிகிச்சை பெற்றுக வருகின்றனர். இது இப்பிரதேச பாடசாலை மாணவர்களின் கல்விக்கு பாரிய சவாலா இருப்பதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஹொரவப்பொத்தானை– வவுனியா பிரதான பாதையிலிருந்து ஆரம்பிக்கின்ற சுமார் 10கிலோ மீட்டர் தூரத்தை உடைய இவ்வீதியை நாளாந்தம் சுமார் 800 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். விவசாயம், அன்றாடக் கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இப்பிரதேச மக்கள் அவசரத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.

அண்மையில் பாதை சீர்கேட்டினால் முச்சக்கர வண்டியில் பெண்னொருவர் குழந்தையை பெற்றெடுத்த சம்பவமும் இங்கு இடம்பெற்றுள்ளது. அவசர மருத்துவத் தேவைகளுக்காக நகர வைத்தியசாலைக்கோ, அரசாங்க அலுவலகங்களுக்கோ செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

வீதியோரமுள்ள பல வடிகால்களும், பாதையை ஊடறுத்து செல்லும் குளத்தின் இரண்டு வான்களும் பழுதடைந்துள்ளமையினால் வாகன போக்குவருத்து சற்றும் சாத்தியம் இல்லாமல் உள்ளது. சிலநேரங்களில் ஊர் மக்களின் உதவியால் சிறு வாகனங்கள் பிரதான பாதையை வந்தடைகின்றன.

இந்நிலையில் பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் வீதிக்கு இறங்கி தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அண்மையில் இவர்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

உள்ளுர் அரசியல் வாதிகள் மாத்திரமன்றி, புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் இந்த விடயத்தில் நழுவிச் செல்லும் போக்குடன் நடக்க முற்படுவதை மக்கள் சுட்டிக் காட்டினர்.

புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஆர். இஸ்ஹாக் இந்த விடயத்தில் உறுதியான பதில் ஒன்றை முன்வைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் என்ற நம்பிக்கையில்தான் தாம் அவருக்கு வாக்களித்ததாகவும் பொது நலன் கருதி அவர் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றர்.

தமது அதியவசிய தேவைகளுக்காக நாளாந்தம் இப்பாதையை பயன்படுத்துவதை தவிர வேறு தெரிவு இப்பிரதேச மக்களுக்கு இல்லை. நீண்ட காலம் தாம் சந்தித்த பல்வேறு சிரமங்களுக்கும் ஆபத்துக்களுக்கு தீர்வு கிடைகாமையினால் தமது உரிமையை பெற்றுக்கொள்ள வீதிக்கு இறங்குவதைத் தவிர வேறு தெரிவும் இவர்களுக்கு இருக்கவில்லை. இனியும் காலம் கடத்தாது இவர்களின் குரல்களுக்கு பொருப்புதாரிகள் பதிலலிப்பார்களா?

LEAVE A REPLY