பிரபல நாளிதழை அரசுடமை ஆக்கிக்கொண்ட துருக்கிக்கு பான் கி மூன் கண்டனம்

0
169

துருக்கி நாட்டின் மிகப்பிரபலமான பத்திரிகையாக விளங்கிவரும் ‘ஸமான்’ நாளிதழின் உரிமத்தை அரசு கையகப்படுத்திக் கொண்ட நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துருக்கி அரசை எதிர்த்தும், துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகனின் அரசியல் எதிரியும், அமெரிக்காவை சேர்ந்த இஸ்லாமிய அறிஞருமான ஃபெத்துல்லா குலேன் என்பவரை ஆதரித்தும் எழுதிவந்த ‘ஸமான்’ நாளிதழை கடந்த வெள்ளிக்கிழமை கோர்ட்டின் உத்தரவின்படி அரசு கையகப்படுத்திக் கொண்டது.

துருக்கி அரசின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரான பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக ஐ.நா.சபை செய்தித் தொடர்பாளரான ஃபர்ஹான் ஹக் கூறியுள்ளார்.

துருக்கியில் நடந்துவரும் சம்பவங்களை மிக நெருக்கமாக பான் கி மூன் கவனித்து வருகிறார். எவ்வித நடவடிக்கையானாலும், கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும். கடுமையான விமர்சனங்களாக இருந்தாலும், அமைதியாக வெளியிடப்படும் கருத்துகள் மற்றும் குரல்களைச் சார்ந்தே ஒரு நாட்டில் வலுவான ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஏற்படும் என பான் கி மூன் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY