மட்டக்களப்பில் மீண்டும் வீடுகளில் தங்கியிருப்போரைப் பதிவு செய்ய பொலிஸார் பணிப்பு

0
231

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களில் வீடுகளில் தங்கியிருப்போர் பற்றிய விபரங்களை பதிவு செய்யுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு நகர பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பிரதேசத்தில் விபரங்களை திரட்டுவதற்கான படிவங்கள் தற்போது பொலிஸாரால் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஆயுத முரண்பாடுகள் நிலவிய காலத்தில் நடைமுறையிலிருந்தது போன்ற இந்த பதிவு முறை காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை காணப்படுகின்றது.

வீடுகளில் நிரந்தரமாக மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்போர், உறவு முறை என வகைப்படுத்தப்பட்ட இன்னும் பல விவரங்கள் அந்த படிவத்தில் பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.

வீட்டு உதவியாளர்கள் உட்பட தற்காலிமாக குடியிருப்போர் பற்றிய விபரங்களில் நிரந்தர வதிவிடம், உறவு முறை தங்குவதற்கான காரணம் மற்றும் தங்கியிருக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கால எல்லை போன்ற விபரங்களும் கேட்கப்பட்டுள்ளன.

போருக்கு பின்னர் சுமூகமான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேனையில் பொலிஸாரின் இந் நடவடிக்கை காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித குழப்ப நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றார் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளரான பிரசன்னா இந்திரகுமார்;.

போர் முடிவடைந்து 8 வருடங்கள் பல கடந்து விட்ட நிலையில் பொலிஸார் குடியிருப்பாளர்களின் விபரங்களை திரட்டுவதற்கான காரணங்கள் பற்றி கூட தெரியாமல் மக்கள் குழப்பமடைந்த நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

குறித்த படிவத்தில் வீட்டில் தங்கியிருக்கும் வேலையாட்கள் உட்பட தற்காலிக குடியிருப்பாளர்கள் தங்கியிருக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கால எல்லை குறித்தும் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

தனது வீட்டில் தங்கியிருக்கும் பணியாளரொருவர் எதிர்பாரமல் விலகலாம் அல்லது விலக்கப்படலாம். இப்படியான நிலையில் அவர் தங்கியிருக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காலத்தை எவ்வாறு வரையறை செய்ய முடியும்? என்றும் பிரன்னா இந்திரக்குமார் வினா எழுப்புகின்றார்.

அடுத்த சில நாட்களில் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் பொலிஸ் பதிவு தொடர்பாக கூடி ஆராய விருப்பதாகவும் அதன் பின்னர் கிழக்கு பிராந்திய துணை பொலிஸ் மா அதிபதியை சந்தித்து இந்த விடயம் பேசவிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பொலிஸ் கட்டளைச் சட்டம் 76ம் பிரிவின் கீழ் தான் வீடுகளில் தங்கியிருப்பவர்கள் விவரங்கள் திரட்டப்படுவதாக அந்த படிவத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என உள்ளுர் பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெறுவது போல் வழமையான செயல்பாடு என்றும் அவர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

LEAVE A REPLY