20 ஓவர் உலக கிண்ணம்: முகமது ஷமிக்கு வாய்ப்பு அளிப்பது கடினம் – டோனி

0
148

20 ஓவர் ஆசிய கிண்ணம் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நேற்று முன்தினம் வங்காளதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. மழையால் 15 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் வங்காளதேசம் எடுத்த 120 ரன்களை , இந்திய அணி 7 பந்துகள் மீதம் வைத்து எட்டியது. கேப்டன் டோனி (20 ரன், நாட்-அவுட்) மெகா சிக்சருடன் ஆட்டத்தை முடித்து வைத்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் டோனி சிக்சருடன் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வது இது 13-வது (ஒரு நாள் போட்டி-9, 20 ஓவர் போட்டி-3, டெஸ்ட்-1) நிகழ்வாகும்.

பின்னர் டோனி கூறுகையில், ‘இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றியை காட்டிலும் தோற்றிருந்தால் மிகப்பெரிய விஷயமாகியிருக்கும். வெற்றி பெறும் போது, இது ஒன்றும் பெரிது இல்லையே என்பார்கள். வங்காளதேசத்திடம் தோல்வி கண்டால், வங்காளதேசத்திடமா தோற்றீர்கள் என்று சாடுவார்கள். வெற்றி பெறும் போது அணியை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல ஊக்கப்படுத்த முன்வரமாட்டார்கள். தோற்றால் கடுமையாக விமர்சிப்பார்கள்’ என்றார்.

டோனி மேலும் கூறுகையில், ‘முகமது ஷமி உலக கிண்ண போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும், அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டாரா? என்பது தெரியவில்லை. அவருக்கு இன்னும் கொஞ்சம் காலஅவகாசம் உள்ளது. புதிய மற்றும் பழைய பந்துகளில் நேர்த்தியாக யார்க்கர் வீசும் திறமை, அவரது பலமாகும். ஆனால் அவர் உடல்தகுதி பெற்றாலும் கூட தற்போது சரியான கலவையில் அணி அமைந்திருப்பதால், நெஹரா அல்லது பும்ரா ஆகியோரில் ஒருவருக்கு பதிலாக ஷமியை களம் இறக்குவது கடினமாகும்’ என்றார்.

ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் உலகின் சிறந்த வீரர் டோனி என்று துணை கேப்டன் விராட் கோலி பாராட்டினார்.

LEAVE A REPLY