(Poem) மனங்களைக் கவர்ந்த மணங்கள்

0
127

(MOHAMED NIZOUS)

தந்தை தந்த
தத்றீஸ் கிதாபை
சந்தோசம் பொங்க
சரி நடுப் பக்கம்
முகர்ந்த மணம் இன்னும்
மூக்குள் இருக்கிறது.

பசியால் சுருண்டு
பள்ளி முடிந்து வர
குசினுக்குள் உம்மா
கூனிறால் வறுக்கின்ற
ருசியும் மணமும்
ரோட்டுக்கே பரவியது
இன்னும் மனதுள்
இனிதாய் மணக்கிறது.

கடைசி புகாரி
கந்தூரி கொடுக்க
கிடாரச் சோறை
கிண்டும் போது
அடி நெஞ்சு வரைக்கும்
அம்மணம் செல்லும்

ஹலிபொரேஞ் போத்தலை
களவில் எடுத்து
குலுக்கிப் போட்டு
கொஞ்சம் குடிக்க
அடிக்கும் மணத்தில்
அடிமனம் மகிழும்.

கூதல் நேரம்
குறுகிப் படுத்து
உம்மா உடுத்த
ஒயில் புடவை எடுத்து
போர்த்தும் போது
புடவையின் மணத்தில்
உடலுடன் சேர்ந்து
உயிரும் தூங்கும்.

முற்றிய மாங்காயை
மூன்று நாளைக்கு
வாகைக் கொத்துள்
வாகாய் வைத்து
மஞ்சள் ஏறியபின்
மணக்கும் பழத்தின்
வாசம் இன்னும்
வாழ்கிறது மனதில்.

பெருநாள் காலை
பிஜாமா சாரணை
விரித்து முகர
வித்தியாச மணமொன்று
உள்ளே சென்று
உயிரில் கலக்கும்.

மனங்களில் கலந்த
மணங்கள் இவை
பணங்களை கொடுத்து
பகட்டுக்கு வாங்கும்
மணங்களை வென்ற
மணங்கள் இவை

LEAVE A REPLY