அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மரணம்:

0
204

அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ரொனால்டு ரீகனின் மனைவி நேற்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து ஒபாமா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் 40-வது ஜனாதிபதியான ரொனால்டு ரீகன் கடந்த 1981-89 ஆண்டுகளில் பதவி வகித்து வந்துள்ளார். இவர் நான்சி ரீகன் என்பவரை திருமணம் செய்து 52 வருடங்களாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து ரொனால்டு ரீகன் கடந்த 2004ம் ஆண்டு மரணமடைந்தார்.

கணவர் மரணமடைந்தற்கு பின்னர், நான்சி ரீகன் கலிபோர்னியாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இதயக்கோளாறு காரணமாக நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் நான்சி ரீகன் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் மரணமடைந்தார். நான்சி ரீகனுக்கு வயது 94 ஆகும்.

நான்சி ரீகன் மரணமடைந்ததை தொடர்ந்து, தற்போதைய ஜனாதிபதியான ஒபாமா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ஒரு ஜனாதிபதியின் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நான்சி ரீகன் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.

நான்சி ரீகனின் மறைவு அதிர்ச்சிகரமாக இருந்தாலும், அவரது வழிகாட்டுதல்கள் எங்களுக்கு எப்போதும் இருக்கும்’ என அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மட்டுமின்றி, தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் நான்சி ரீகனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY