சவுண்டஸ் விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில் NFGG தீவிர கவனம்

0
280

மஞ்சந் தொடுவாய் சவுண்டஸ் விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

காத்தான்குடி வடக்கு எல்லைப் பிரதேசமான 19ஆம் வட்டாரம் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த மைதானமானது பலவருட காலமாக எவ்வித அபிவிருத்தியையும் காணாமல் மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனை அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றினை NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் சவுண்டஸ் விளையாட்டுக் கழக பிரதிநிதிகளோடு கடந்த 05.03.2016 அன்று மேற்கொண்டிருந்தார்.

சவுண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் சிரேஸ்ட மற்றும் கனிஸ்ட அங்கத்தவாகள் எனப் பலரும் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் NFGG யின் சார்பாக அதன் மட்டக்களப்புப் பிராந்திய சபை உறுப்பினர்களான SM ஹில்மி, KLM புஹாரி ஆகியோருடன் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் NK றம்ழான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சவுண்டஸ் விளையாட்டுக் கழகமானது 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித அபிவிருத்தியையும் காணாது மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது. வருடத்தில் 6 மாத காலத்திற்கு இம்மைதானத்தில் நீர் தேங்கி நிற்கின்ற காரணத்தினால் ஒரு வருடத்தில் ஒருசில மாதங்களுக்கு மட்டுமே இம்மைதானத்தைப் பாவிக்கக் கூடியதாக இருக்கிறது.

இம்மைதானத்தின் நில மட்டத்தினை உயர்த்தி நிரந்தர அபிவிருத்தியினை மேற் கொள்ளுகின்ற வேலைத்திட்டம் மிக முக்கியமான ஒன்றாக எல்லோராலும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் எந்தவொரு அரசியல் வாதிகளினாலும் இவ்விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தின் போது இவ்விடயமானது NFGGயின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

‘பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு அரசியல் அதிகாரம் கிடைக்கின்ற போது இம்மைதான அபிவிருத்தி விடயம் முன்னுரிமை அடிப்படையில் மேற் கொள்ளப்படும்’ என்ற உறுதி மொழியினை NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் சவுண்டஸ் விளையாட்டுக் கழகத்தினரிடம் தெரிவித்திருந்தார்.

தேர்தலினைத் தொடர்ந்து அரசியல் அதிகாரம் எதுவும் NFGGக்குக் கிடைக்காத போதிலும் கூட இம்மைதான அபிவிருத்தி விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி சாத்தியமான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே குறித்த கலந்துரையாடலை பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சவுண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் AR நஜீம் அவர்கள் ‘தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசியல் அதிகாரங்களைக் கொண்டவர்களே மறந்துவிட்டிருக்கும் நிலையில், நாம் வேண்டுகோள் எதுவும் விடுக்காத நிலையிலும் கூட தாமாக முன்வந்து இந்த முயற்சியினை மேற் கொண்டிருக்கிறீர்கள். இது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றதோடு நாம் மிகவும் திருப்தியும் மகழ்ச்சியும் அடைகிறோம்’எனத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பொயியலாளர் அப்துர் ரஹ்மான்:
‘இம்மைதான அபிவிருத்தியினை நமது பிரதேசத்தில் முன்னுரிமைப்படுத்த வேண்டிய ஒன்றாக நாம் அடையாளம் கண்டிருக்கிறோம். இம்மைதானத்தை நிரப்பி நிலமட்டத்தை உயர்த்தி தரமான ஒரு மைதானமாக அபிவிருத்தி செய்வதென்பது ஒரு பாரிய வேலைத் திட்டமாகும்.

எமக்கு கடந்த தேர்தலில் ஒரு அரசியல் அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில் முழு முயற்சியுடன் எப்படியாவது இதனை இறைவனின் உதவியுடன் நிறைவேற்ற வேண்டும் என்ற திடமான எண்ணம் எமக்கிருந்தது. இருந்தாலும் இறைவனுடைய நாட்டப்படி நாம் எதிர்பார்த்த அரசியல் அதிகாரம் எமக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையிலும் கூட இம்மைதானத்தை எப்படியாவது அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அந்த வகையில் சில காத்திரமான முயற்சிகளை நாம் தொடங்கியிருக்கிறோம். எமது முயற்சி வெற்றி பெற நீங்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலை தொடர்ந்து , இம்மைதானத்தின் தற்போதைய நிலையினையும் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் கடந்த 05.03.2016 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

கடந்த காலங்களில் இம்மைதானத்தின் ஒரு பகுதியை சிலர் பலத்காரமாக பிடித்து உரிமை கோரிக்கொண்டிருந்த நிலையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற் கொண்டு அதனை மீட்டெடுப்பதற்கு NFGG உதவியது என்பதோடு அதன் எல்லையை உறுதிப்படுத்துவதற்காக ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியினையும் தமது சொந்த நிதியிலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் NFGG வழங்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY