சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த ஒரு வாரத்தில் சிரியாவில் 135 பேர் பலி

0
139

சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வந்தனர். அதிபருக்கு ஆதரவாக ரஷிய படைகள் சிரியாவில் வான்வழி தாக்குதல்களை நடத்தி வந்தன. 5 ஆண்டுகளாக நடந்து வந்து இந்த உள்நாட்டு போரில் 2½ லட்சம் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று உள்ளனர்.

இந்த நிலையில், ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளின் கடும் முயற்சியால் சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் கடந்த மாதம் 27-ந்தேதி சிரியாவில் சண்டை நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதிலும் சண்டை நிறுத்தம் மீறப்படுவதாக அரசு தரப்பும் கிளர்ச்சியாளர்கள் தரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தநிலையில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த ஒரு வார காலத்தில் நடந்த வான்தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களில் 135 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. அப்பாவி மக்கள் 32 பேரும், கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தரப்பில் 45 பேரும் பலியாகி உள்ளனர்.

அதே போல் சிரிய ராணுவவீரர்கள் 25 பேரும், மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அல்-கொய்தாவின் இணை இயக்கமான நுஸ்ரா முன்னணியை சேர்ந்தவர்கள் 33 பேரும் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY