மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கு: 24 சாட்சிகளையும் விசாரணைக்கு அனுப்பி வையுங்கள்-இந்தியாவுக்கு பாகிஸ்தான் கடிதம்

0
197

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக ஜகியுர் ரஹ்மான் லக்வி உள்பட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஏழுபேரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக பாகிஸ்தானில் இருக்கும் சிலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மும்பையில் தாக்குதல் நடந்த இடத்தை பாகிஸ்தான் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

இந்த வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் சாட்சிகளாக முன்னர் விசாரிக்கப்பட்ட 24 பேரையும் இஸ்லாமாபாத் கோர்ட்டில் ஆஜராகி மீண்டும் சாட்சியம் அளிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு அழைத்துவர வேண்டும் என பாகிஸ்தான் நாட்டு தேசிய புலனாய்வு முகமையின் சார்பில் இவ்வழக்கில் ஆஜராகி வாதாடிவரும் வழக்கறிஞர் சவுத்ரி நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, இவ்வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள 24 பேரை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து இஸ்லாமாபாத் கோர்ட்டில் அவர்களின் சாட்சியத்தை பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும், மும்பை தாக்குதலுக்காக அஜ்மல் கசாப் உள்ளிட்டவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் படகுகள் இவ்வழக்கின் முக்கிய சாட்சியங்களாக இருப்பதால் அந்தப் படகுகளை பரிசோதிக்க வேண்டியுள்ளது. படகுகளையும் பாகிஸ்தானுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார்.

இந்நிலையில், மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள 24 பேரையும் விசாரணைக்காக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கும்படி இந்திய அரசுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது கடிதம் எழுதியுள்ளது.

பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை ஏற்று மேற்படி வழக்கின் சாட்சிகளான 24 பேரையும் இந்திய அரசு அனுப்பி வைக்குமா? அல்லது, அவர்களின் பாதுகாப்பை காரணம் காட்டி, இங்கிருந்தபடியே வீடியோ கான்பிரன்சிங் முறையில் இஸ்லாமாபாத் கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY