கிழக்கு மாகாணத்தில் 3494 முன்பள்ளி ஆசிரியர்கள் வேதனமின்றி சேவையாற்றுகின்றனர்: பொன். செல்வநாயகம்

0
235

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கிழக்கு மாகாணத்தில் உள்ள 4065 முன்பள்ளி ஆசிரியர்களில் 571ஆசிரியர்கள் மட்டுமே ஏதாவது ஒரு கொடுப்பனவினை பெறுகின்றனர். ஏனைய 3494 ஆசிரியர்களும் எதுவித கொடுப்பனவும் இன்றி கடையாற்றிவருகின்றனர் என கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார்.

வேதனமின்றிப் பணியாற்றும் தொண்டர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு சனிக்கிழமை மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்பள்ளி டிப்ளோமா பாடநெறியை மேற்கொள்ளும் விரிவுரையாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த ஆண்டை கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகமும் இணைந்து ஆசிரியர்களை மேம்படுத்தும் ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளது.

அதன் முதலாவது கட்டமே இந்த டிப்ளோமா பாடநெறி ஆரம்பிக்கப்படும் விடயமாகும். கிழக்கு மாகாணத்தில் 4065 முன்பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.

1832பதிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகள் இயங்குகின்றன.

இந்த அனைத்து ஆசிரியர்களும் கல்வித் தகைமை பெற்றவர்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இன்னும் 1600 ஆசிரியர்கள் டிப்ளோமா தரத்தினைப் பெறவேண்டியுள்ளது. அத்துடன் க.பொ.த.சாதாரண பரீட்சையில் சித்தியடையாதவர்களும் பாலர் பாடசாலை ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றனர்.

பல ஆண்டுகாலமாக சேவையில் ஈடுபட்டுள்ள அவர்களையும் வளப்படுத்துவதற்கு திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம்.

இந்த ஆண்டு 1000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறியை பூர்த்திசெய்யும் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

டிப்ளோமா பாடநெறியை பெறும்போதே முன்பள்ளி ஆசிரியர்கள் பூரணத்துவமிக்க ஆசிரியர்களாக கருதப்படுவார்கள்.

கல்வியுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பெறவேண்டும் என்பதற்காக ஆசிரியர்களின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை இந்த ஆண்டு மேற்கொண்டு வருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

முன்பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சிகொள்ளும் ஆண்டை பிரகடனப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

20வருடங்களுக்கு முன்னர் நினைத்தவாறு பாலர் பாடசாலைகளை அமைத்துவந்தோம். ஆனால் இப்பொழுது அவ்வாறு அமைக்க முடியாது.

பாலர் பாடசாலைகளைப் பதிவு செய்தலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் பணிப்பின்பேரில் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்.

பாலர் பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் தங்களை தகுதியுடையவர்களாக மாற்றவேண்டும்.இந்த ஆண்டு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒளிமயமான ஆண்டாகும்.

LEAVE A REPLY