பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக அதிகரித்துச் செல்லும் வன்முறைகளை தடுக்கும் வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதரின் ஆலோசனையின் கீழ் விசேட திட்டங்கள்

0
191

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வன்முறைகளை தடுக்கும் வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதரின் ஆலோசனையின் கீழ் விசேட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் மகளிர் பணியகத்தினை ஞாயிற்றுக்கிழமை 06.03.2016 திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

சிறுவர் மற்றும் மகளிரின் பாதுகாப்பினையும் அவர்களின் எதிர்கால நலனையும் கருத்திற் கொண்டு இவ்வாறான அதிக முறைப்பாடுகள் கிடைக்கும் பகுதிகளில் இவ்வாறான நிலையங்கள் நாடெங்கிலும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இதன் 28வது பணியகமாக இங்கு இந்த நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் வன்முறையற்ற சிறந்த சூழலை உருவாக்கும் வகையிலேயே இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கு வரும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தமது தேவைகளை சுதந்திரமாக நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

பொலிஸ் என்றால் பயம் கொள்ளும் நிலைமை இருந்து வருகின்றது.

ஆனால், இந்த நிலையம் மூலம் அவ்வாறு எந்த பயமும் இன்றி தமது தேவையினை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

அதற்கு ஏற்றவாறே இந்த நிலையத்தின் செயற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையங்கள் மூலம் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்கள் தோறும் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த குழு பொலிஸ் மற்றும் மாவட்ட செயலகங்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்தத் திட்டங்களுக்கு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால் சில சக்திகள் அவற்றினை குழப்பும் வகையில் செயற்பட்டுவருவதாகவும் அவர்கள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.

அண்மைக்காலமாக இடம்பெறும் பல சம்பங்கள் கவலை கொள்ளச் செய்கின்றன.

பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிக அக்கறையெடுத்து செயற்பட வேண்டும். அடுத்த வீட்டு பிள்ளைகளாக இருந்தாலும் அவர்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் ஒரு பச்சிளம் பிள்ளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட நிலையில் தனது மானத்தினை காப்பதற்காக அந்த பிள்ளை தற்கொலை செய்துள்ளது.

இவ்வாறான பாதகச் செயல்களைச் செய்பவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

இவ்வாறானவர்களுக்கு வழங்கும் தண்டனை இன்னொருவர் குற்றம்செய்ய நினைக்காதவாறு அமையவேண்டும். அவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க கூடாது.
இதற்கான சட்டங்கள் உள்ளன.

அது செயற்படுத்தப்படாது விட்டால் அந்த சட்டத்தினால் எந்த பிரயோசனமும் இல்லையென்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY