புற்றுநோய் பற்றிய கண்ணோட்டம்

0
255

மருத்துவ உலகுக்கு, புற்றுநோய் ஒரு சவாலாக விளங்குகிறது. புற்றுநோய் வந்தால் அதைக் குணப்படுத்துவதற்கு மருத்துவர்கள் திணறுகின்றனர். புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே தெரிந்துகொண்டால் சிகிச்சை செய்து கட்டுப்படுத்திவிடலாம் என்கிறார்கள். ஆரம்பக் கட்டத்தில் அது புற்றுநோய்தான் என்று நோயாளிக்குத் தெரிவதே இல்லை. அது முற்றி வேதனை அதிகமானதும்தான் டாக்டர்களிடம் அதைப்பற்றி விவரமாகத் தெரிவிக்கிறார்கள். அதன் பிறகே தீவிர சோதனைகள் மூலம் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. நோய் முற்றிய பிறகு மருத்துவர்களாலும் ஏதும் செய்ய முடிவதில்லை.

புற்றுநோய்க்கு தாற்காலிக மருந்துகள் அலோபதி (ஆங்கிலமுறை மருத்துவம்), ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் என்று அனைத்து மருத்துவ முறைகளிலும் இருக்கிறது. ஆனால் நிரந்தர நிவாரணத்துக்கு மருந்துகள் இல்லை.

ஜப்பானிய மருத்துவர்கள் மூங்கில் இலைச் சாறைப் பயன்படுத்துகின்றனர், ஹங்கேரிய மருத்துவர்கள் திராட்சைப்பழச் சாறைப் பயன்படுத்துகின்றனர் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு வயிற்றில் புற்றுநோய் கண்டு அதற்கு அந் நாட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து பிழைக்க வைத்துள்ளனர். அது நிரந்தர சிகிச்சையா, தாற்காலிகமா என்று தெரியவில்லை. தேள் விஷத்திலிருந்து கியூபா மருத்துவர்கள் மருந்து தயாரிக்கின்றனர் என்ற தகவலும் பத்திரிகைகளிலும் வந்திருந்தது. இந்த மருந்தும் அப்படிப்பட்டதுதானா என்று தெரியவில்லை.

வெனிசூலா அதிபராக இருந்த ஹியூகோ சாவேஸýக்கும் கியூபாவில்தான் சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

உலகின் வெவ்வேறு பகுதிகளையும் சேர்ந்த, வெவ்வேறு மருத்துவமுறை மருத்துவர்கள் புற்றுநோயைக் கட்டுப்படுத்தியும் குணப்படுத்தியும் சிகிச்சை அளிக்கின்றனர். அவர்கள் அனைவரையும் அழைத்து பொதுவான, நிரந்தரமான சிகிச்சை முறைக்கு “உலக சுகாதார ஸ்தாபனம்’ வழிகாண வேண்டும்.

“போலியோ’ (இளம்பிள்ளை வாதம்) இல்லாத உலகை அமைப்போம், “எய்ட்ûஸ’ ஒழிப்போம் என்ற வகையில் புற்றுநோய்க்கும் ஒரு தீர்வு காண உலகளாவிய முயற்சிகள் தேவை. ஏழை, பணக்காரர், பெரியவர், சிறியவர், ஆடவர், மகளிர் என்ற வேறுபாடுகள் இல்லாமல் இந்த நோய் அனைவரையும் தாக்குகிறது.

புற்றுநோயால் ஏற்படும் வலியால் நோயாளி பாதிக்கப்படுவதைக் கண்டு அவருக்கு நெருங்கிய உறவினர்களும் கடும் வேதனை அடைகின்றனர். எனவே வியாதிகளில் இது வித்தியாசமாக இருக்கிறது.

தமிழக அரசு இந்த நோய் தடுப்பில் முன்னோடியாகச் செயல்பட முடியும். புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் நிபுணர்களைப் பல குழுக்களாகப் பிரித்து, மாவட்டத்துக்கு ஒரு குழுவாக மாதந்தோறும் குறிப்பிட்ட நாள்களுக்கு அனுப்பி, புற்றுநோய் அறிகுறி அல்லது சந்தேகத்துக்கு இடமாக இருக்கும் நோயாளிகளைப் பரிசோதித்து உரிய மருந்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கச் செய்யலாம். இதனால் நோய் முற்றியபிறகு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

எல்லா மாவட்ட, வட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சைக்குத் தனிப்பிரிவை ஏற்படுத்தலாம். புற்றுநோய் சிகிச்சைக்கான கருவிகளையும், மருந்துகளையும் நல்ல தரத்தில் அங்கே இடம்பெறச் செய்யலாம்.

புற்றுநோய் மருத்துவத்திலும் சிகிச்சையிலும் மேலும் பல இளம் மருத்துவர்களை ஈடுபடுத்தி எதிர்காலத்தில் இந் நோய்க்கு எளிதில் சிகிச்சை பெற வகை செய்யலாம்.

LEAVE A REPLY