சம்பிக்கவினது அமைச்சின் வாகனத்தில் மோதிய இளைஞர் – உண்மையில் நடந்தது என்ன?

0
235

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஊடகங்களில் திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் வௌியிடப்படுவதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை களுத்துறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக, அந்த அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை எமது அமைச்சுக்கு சொந்தமான ஜீப் வண்டி ஒன்று, இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த வேளை, இடம்பெற்ற விபத்து தொடர்பில் மிகவும் திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வௌியிடப்படுகின்றன.

அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற மோட்டார் வாகன கண்காட்சியின் பின்னர், இளைஞர் குழுவொன்று அவர்களுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் பாராளுமன்ற வீதியால் சென்று கொண்டிருந்தனர்.

விபத்துக்குள்ளானது 1000cc மோட்டார் சைக்கிள், அவ்வாறான பைக்குகளுக்கு பாதையில் பயணிக்க அனுமதியில்லை. எதுஎவ்வாறு இருப்பினும் பத்துக்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் அதிக வேகத்துடன் இவ்வாறு அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தன.

இது குறித்து பொலிஸாருக்கு நன்கு தெரியும். அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் இளைஞர். அவர் தான் எமது வாகனத்தின் பின்னால் மோதி இந்த விபத்தை ஏற்படுத்தினார். நாம் இது குறித்து விசாரிக்கும் அனைத்து அதிகாரங்களையும் பொலிஸாருக்கு வழங்கியுள்ளோம்.

பொலிஸார் இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வார்கள் என நாம் நினைக்கிறோம். இவ்வாறான மோட்டார் சைக்கிள் குழு அதேபோல் சிறு வயதினர் அதிக வேகத்துடன் மோட்டார் சைக்கிளில் பிரதான வீதிகளில் பயணிக்கும் கெட்ட பழக்கத்தை கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் பார்த்தோம். அவை நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது நல்லாட்சியில் அவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனவே இது தொடர்பில் கடுமையான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாம் எதனையும் மறைக்கவில்லை, சாரதி உள்ளிட்ட அனைத்தையும் ஒப்படைத்துள்ளோம். அதேபோல் குற்றவாளி யார் என்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாம் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கோ சட்டத்துக்கு கட்டுப்பட்ட பிரஜைகள் என்ற அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

நாம் பெற்றோரிடம் விஷேடமாக கேட்டுக் கொள்வது உங்கள் பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்துங்கள் அதிவேக மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் போது ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுங்கள்.” எனக் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY