ஆசிய கிண்ணம்: அமீரக அணியை 81 ரன்களில் சுருட்டிய இந்திய பந்து வீச்சாளர்கள்

0
183

ஆசிய கிரிக்கெட்டில் இந்திய அணி இன்று ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதும் போட்டி 7 மணிக்கு தொடங்கியது. இதில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

20 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் வங்காளதேசம், பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி நேற்று முன்தினம் இலங்கையையும் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்த நிலையில் இந்தியா தனது கடைசி லீக்கில் இன்று 3 தோல்வி கண்டுள்ள குட்டி அணியான ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற அமீரகம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு விளையாட வாய்ப்பு கிடைக்காத பவன் நெகி, ஹர்பஜன் சிங் மற்றும் புவனேஷ் குமாருக்கு இன்று வாய்ப்பு அளிக்கப்பட்டது. அஸ்வின், நெஹ்ரா மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

ரோஹன் முஸ்தபாவும், ஸ்வப்னில் பாட்டீலும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினார்கள். ஸ்வப்னில் பாட்டீல் 1 ரன்னில் அவுட் ஆனார். இந்திய அணியில் சேர்க்கப்பட்ட புவனேஷ் குமார் தான் வீசிய முதல் இரண்டு ஓவர்களையும் மெய்டனாக வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

அமீரக அணியில் சைமான் அன்வர் மட்டும் இந்திய பந்து வீச்சை தாக்கு பிடித்து ரன் குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

20 ஓவர் முடிவில் அமீரகம் 9 விக்கெட்களை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. சைமான் அன்வர் 43 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் புவனேஷ் குமார் 2 விக்கெட்களையும், பவன் நெகி, ஹர்பஜன் சிங், பும்ரா, யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

LEAVE A REPLY