ராஜீவ்காந்தி கொலை; சிறையிலுள்ளவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம்

0
167

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவிக்கும் சாந்தன் , பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மத்திய அரசின் கருத்தை தெரிவிக்குமாறு தமிழக அரசு கோரியுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

அதற்கமைய தமிழக அரசின் பிரதம செயலாளர் கு. ஞானதேசிகன் மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளதாகவும் தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய 4 பேரையும் சேர்த்து மொத்தம் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானித்திருந்தது.

எனினும் ராஜிவ்காந்தி கொலை வழக்கு தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவிடம் காணப்பட்டதால் தமிழக அரசின் தீர்மானம் குறித்து மத்திய அரசின் கருத்தை கேட்டறிய வேண்டிய அவசியம் காணப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசின் தீர்மானம் குறித்து மூன்று தினங்களுக்குள் கருத்தை தெரிவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

எனினும் மத்திய அரசு தமது கருத்தை தெரிவிக்காது, மாறாக தமிழக அரசின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், அதன்போது ஐவரடங்கிய அரசியலமைப்பு அமர்வொன்றினூடாக தமிழக அரசின் தீர்மானம் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து 3 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டதுடன் இதுவரை விசாரணையின்றி நிலுவையில் காணப்படுவதாகவும் மத்திய அரசிற்கு தமிழக பிரதம செயலாளர் எழுதியிலுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

இதற்கிடையே, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் தி ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 7 பேரில் முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY