உடலை தோண்டி, இரண்டாம் முறை பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதவான் உத்தரவு

0
147

எம்பிலிபிட்டிய சுமித் பிரசன்னவின் உடலை தோண்டி, இரண்டாம் முறை பிரேத பரிசோதனை செய்யுமாறு எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பெனாண்டோ இன்று (03) உத்தரவிட்டார்.

கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் மற்றும் அவர் பெயர் குறிப்பிடும் மற்றும் இரு வைத்திய அதிகாரிகளுடன் குறித்த பணியை மேற்கொள்வதற்கான உத்தரவை நீதவான் இதன்போது வழங்கினார்.

ஆயினும், சுமித் பிரசன்னவின் மனைவி உள்ளிட்ட அவரது குடும்பத்தார், அவரது உடலை தோண்டி எடுப்பதற்கு எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, ஏற்கனவே இன்று (03) காலை நீதிமன்றால் கோரப்பட்டிருந்த சத்தியக்கடதாசி அல்லது அதற்கான கோரிக்கை கடிதத்தை வழங்குவதற்கும் மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், நீதியை நிலைநாட்டும் பொருட்டு, இரண்டாவது பிரேதபரிசோதனை அவசியம் என, சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்ததோடு, சட்ட மாஅதிபர் சார்பாக மிக நீண்ட வாத பிரதிவாதங்களை மேற்கொண்ட அரசாங்க தரப்பு சிரேஷ்ட வழக்கறிஞர் சுதர்ஷன டி சில்வா, சடலத்தை மீண்டும் தோண்டியெடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு நீதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இதனை அடுத்து எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி சடலத்தை தோண்டுவதற்கான அனுமதியை வழங்கினார்.

இதேவேளை குறித்த பிரேத பரிசோதனை இடம்பெறும் வேளையில், சந்தேகநபரான முன்னாள் ASP தர்மரத்ன மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்தவரின் சொந்தக்காரர் ஒருவருக்கு அதனை கண்காணிக்க முடியும் என, நீதவான் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

LEAVE A REPLY