இந்த நாடு பிரியக் கூடாதெனில் தமிழ்பேசும் மக்களின் பூர்வீகதாயகத்தை இணைத்து சஸ்டி ஆதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்: கோவிந்தன் கருணாகரம்

0
213

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இந்த நாடு எதிர்காலத்தில் பிரிந்துசெல்லா நிலையேற்படவேண்டுமானால் தமிழ்பேசும் மக்களின் பூர்வீக தாயகமான வடகிழக்கு இணைக்கப்பட்டு சமஸ்டி ஆதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பிரதேசத்தில் உள்ள இந்து இளைஞர் மன்றத்திற்கான இசைக்கருவிகள் மாகாண சபை உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கும் நிகழ்வு நடைபெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தாதார்.

பட்டிப்பளை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ். ருபேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தியும் கலந்து கொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

எமது பிரதேசங்களில் எமது கலைகலாசாரங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுவருகின்றது. மதுபான நிலையங்கள் வேறு மாவட்டங்களில் இருந்து எமது பிரதேசத்திற்கு கொண்டுவரப்படுகின்றது.

90களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்துக்கு மேற்பட்ட மதுபானசாலைகள் இல்லை. ஆனால் அறுபதுக்கும் மேற்பட்ட மதுபான சாலைகள் உள்ளன. அதில் படுவான்கரை பகுதியில் மூன்று மேற்பட்ட மதுபானசாலைகள் உள்ளன.

எமது எதிர்கால சந்ததியினரை அழிப்பதற்காக பெரும்பான்மையினத்தவர்கள் கடந்த காலத்தில் திட்டமிட்டு செயலாற்றிவந்தனர்.

அந்தவகையில் எமது கலைகலாசாரங்களும் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இல்லாமல் சென்றுகொண்டுள்ளது.

முன்னைய ஆலய திருவிழா காலங்களில் பாரம்பரிய கலையான கூத்துக்களை கண்டுகளிக்கும் நிலை இருந்தது.

தற்போது ஆலயங்களில் திருவிழா காலங்களில் சினிமா படம் பார்க்கும் நிலையே எமது பிரதேசத்தில் இருந்துவருகின்றது.

மேற்கத்தைய இசைகளில் மூழ்கியுள்ள நாங்கள் எமது கலை கலாசாரங்களையும் பேணவேண்டும். நாங்கள் இந்த நாட்டினை பிரிக்கவேண்டும் என்று கோரவில்லை.

இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்பட்டு, இரண்டாம் தர பிரஜைகளாக ஆக்கப்பட்டு அடிமைகளாக நடாத்தப்பட்டோம்.

அதில் இருந்து நாங்கள் விடுதலை பெறவேண்டும். எங்களை நாங்களே ஆளக்கூடிய பிரதேசம் ஒன்று வேண்டும் என்ற காரணத்தினாலேயே நாங்கள் ஈழத்திற்காக போராடினோம்.

அந்த போராட்டத்தினை பத்து நாடுகள் இணைந்து 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவந்தனர். மஹிந்த ராஜபக்ஸ அந்த நாடுகளுக்கு உறுதி மொழி வழங்கிய காரணத்தினாலேயே அந்தநாடுகள் உதவுசெய்தன.

இந்தியா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகள் இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவரும்போது வடகிழக்கு தமிழர்களின் பிரச்சினைக்கு அவர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வுகொடுக்கப்படவேண்டும் என்ற ரீதியில் இந்த நாட்டு அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கியது.

ஆனால் அந்த போராட்டம் முடிவுக்கு கொண்வரப்பட்டதுடன் ராஜபக்ஸ அந்த நாடுகளை ஏமாற்றும் செயற்பாடுகளை மேற்கொண்டார். அந்த ரீதியிலேயே அவரது ஆட்சி கவிழக்கப்பட்டு புதிய ஆட்சி உருவாக்கப்பட்டது.

இந்த நாட்டில் உருவாகியுள்ள புதிய ஆட்சியை புதிய விடிவெள்ளி போல் தமிழ் மக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பார்க்கின்றது.

ராஜபக்ஸவின் அராஜக ஆட்சியை இல்லாமல்செய்யப்பட்டதில் பெரும்பங்கு தமிழ் பேசும் மக்களுக்கும் உண்டு. ஐந்து இலட்சம் மேலதிக வாக்குகளினாலேயே மைத்திரிபால சிறிசேன வெற்றியடைந்தார். அந்த ஐந்து இலட்சம் வாக்குகளை மேலதிகமாக அளித்தவர்கள் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினர் என்பதை மறக்கமுடியாது.

இந்த புதிய ஆட்சியில் இந்த ஆண்டுக்குள் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் நிரந்தர தீர்வு வரும் என்று தெரிவித்துள்ளார்.

அவருக்கு இந்த அரசாங்கமும் மேற்கத்தைய நாடுகளும் உறுதிமொழி வழங்கியிருக்கலாம் என நாங்கள் கருதுகின்றோம்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் ஆண்டாக 2016ஆம் ஆண்டினை நாங்கள் பார்க்கின்றோம். இந்த ஆண்டுக்குள் அதிகாரங்கள் பகிரப்பட்டு தமிழீழத்திற்கு ஒப்பான. எங்களை நாங்களே ஆளக்கூடிய அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கியதாக சமஸ்டி தீர்வுத்திட்டம் வழங்கப்படவேண்டும்.

ராஜபக்ஸ கூட்டத்தினர் இந்த நாட்டில் மீண்டும் இனவாதத்தினை பரப்ப தொடங்கியுள்ளனர். இந்த நாட்டில் பிரச்சினை தீரக்கூடாது என்பதில் கருத்தாகவுள்ளனர். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் புலிகளை நாங்கள் அழிக்கவேண்டும் அவர்களை தோற்கடிக்கவேண்டும் என்று வாக்கு கேட்டவர்கள் இன்று மீண்டும் புலிகள் வந்துவிடுவார்கள், அதிகாரம் வழங்கினால் நாடு பிளவுபட்டுவிடும் என்று தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி தங்கள் அதிகாரங்களை மீள் நிறுத்த முயற்சிக்கின்றனர்.

சமஸ்டி அதிகாரங்களை வழங்கிய எந்த நாடும் பிரிந்ததாக சரித்திரம் இல்லை. கனடா நாட்டில் கியுபெக் என்னும் மாநிலம் உள்ளது. அவர்கள் விரும்பினால் பிரிந்துசெல்லாம். ஆனால் அங்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு சகலரும் சமமாக மதிக்கப்படுவதனால் தாங்கள் இணைந்தே இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார்கள்.

இதேபோன்று பிரித்தானியாவின் ஸ்கொட்லான்ட் மாநிலத்திலும் பிரிந்துசெல்ல வாக்கெடுப்பு நடாத்தப்பட்டபோதும் அவர்கள் இணைந்தே இருக்கவேண்டும் என்று வாக்களித்தனர். இவ்வாறு பல நாடுகளை நாங்கள் உதாரணமாக கொள்ளமுடியும்.

வடகிழக்கு மாகாணம் பல விதத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இயற்கை அனர்த்தங்கள் மற்றும் இனமோதல்கள், யுத்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். அந்தவேளையில் பல கோடி ரூபா பணத்தினை வெளிநாடுகள் வடகிழக்கினை அபிவிருத்தி செய்ய வழங்கியது. அந்த நிதிகள் கடந்த ஆட்சிக்காலத்தில் தெற்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் இணைந்த வடகிழக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் இருக்குமானால் நிதிகள் எங்களின் கைகளுக்கு வரும் நாங்கள் எமது பகுதியினை அபிவிருத்தி செய்ய முடியும்.

LEAVE A REPLY