ஆசியக் கிண்ண டி20: 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது வங்காளதேசம்

0
216

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.

20 ஓவர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மிர்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 129 ரன்கள் எடுத்தது. மாலிக் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்பிராஸ் அகமது அதிரடியாக ஆடி 58 ரன்கள் குவித்தார். வங்காளதேசம் தரப்பில் அல்-அமீன் ஹொசைன் 3 விக்கெட்களையும், சன்னி அராபத் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து சவும்யா சர்கார் மற்றும் சபீர் ரஹ்மான் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளித்து விளையாடியனர். அணியின் ஸ்கோர் 46ஆக இருந்தபோது சபீர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய சர்காரும் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதிக்கட்டத்தில் இணைந்த சாஹிப் அல் ஹாசன் மற்றும் மொர்டாசா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இதனால் 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வங்களாதேசம் வெற்றி பெற்றது. சாஹிப் 22 ரன்களுடனும் மொர்டாசா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சிறப்பாக விளையாடி 48 ரன்கள் எடுத்த சர்கார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள வங்காளதேசம் அணி 3-ல் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 3-ல் 2-ல் தோல்வியடைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மார்ச் 6-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியை வங்காளதேசம் எதிர்கொள்ள உள்ளது.

இதனிடையே இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதவுள்ளன.

LEAVE A REPLY