சஷீந்திரவை ராஜபக்ஷ்வை வெல்லவைக்க பஷில் ரூ 7000 மில்லியன் செலவு

0
219

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையன்றி ஊவா முதலமைச்சராகவிருந்த சஷீந்ர ராஜபக்ஷ்வை மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்ய அப்போது அமைச்சராகவிருந்த பஷில் ராஷபக்ஷ 7000 மில்லியன் நிதியில் பொருட்களை பகிர்ந்தளித்ததாக அமைச்சர் விஜித விஜய முனி சொய்சா தெரிவித்தார். அத்தோடு வாக்காளர்களுக்கு பெருந்தொகை பணமும் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்;

அம்பாந்தோட்டையிலும், அத்தனகல்லையிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்விகண்டபோது மொனராகலை மாவட்டத்தில் வெற்றிபெற்றது.

நாம் ஒருபோதும் பணம் பகிர்ந்தளிக்கும் செயலில் ஈடுபட்டது கிடையாது. நாம் எவ்வளவு கூறியும் சஷீந்திர ராஜபக்ஷவின் வெற்றி்க்காக பஷில் ராஜபக்ஷ பணத்தையும் பொருட்களையும் பகிர்ந்தளித்தார்.

நான் பஷில் ராஜபக்ஷவை நேரடியாகச் சந்தித்து பணம் பகிர்ந்தளிக்க வேண்டாம் என கூறினேன். அப்போது அவர்கள் வேறு ஒரு விடயத்தை தொடர்புபடுத்தி என்னை கைது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டதையும் நான் குறிப்பிடவேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடு முழுவதிலும் ஒரே மாதிரியான கட்சி அலுவலகத்தை நிர்மாணித்ததையும் குறிப்பிட முடியும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்கள் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்படுகின்றன. அத்தகையோருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

நாம் இதனை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் வலியுறுத்துகின்றோம். அத்தகையோரைக் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.

நாடு இப்போது ஜனநாயக ரீதியில் செயற்படுகிறது. நீதிமன்றங்கள் சுயாதீனமாகியுள்ளன. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உட்பட அனைத்து ஆணைக்குழுக்களும் சுதந்திரமாக இயங்குகின்றன. இத்தகைய ஆணைக்குழுக்களை அமைத்த மாத்திரத்திலேயே அவை நூற்றுக்கு நூறு வீதம் முறைப்படுத்தப்பட்டுவிட்டன எனக் கூறமுடியாது. இன்னும் சில தலையீடுகள் அவற்றிற்கு உள்ளன.

நாம் அதனை எதிர்க்கின்றோம்.

எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் சுதந்திரமாக செயற்படக்கூடிய நிலை உருவாக்கப்படுவது மிக முக்கியமாகும். இது தொடர்பில் நாம் உறுதியாகவுள்ளோம். இலஞ்ச ஊழல் மோசடி விசாரணைகளில் சம்பந்தப்பட்டோருக்கு தண்டனை வழங்குவதும் இதில் முக்கியமாகிறது.

LEAVE A REPLY