கூகுள் தானியங்கி கார் மீண்டும் விபத்தில் சிக்கியது

0
183

எல்லாத் தேடல்களுக்கும் விடைதரும் இணையதள தேடுப்பொறிகளின் ஜாம்பவானான கூகுள் கடந்த சில வருடங்களாகவே பல்வேறு தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகிறது. நீண்டநாள் ஆய்வின் பலனாக தானியங்கி கார்களையும் அந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தக் காரில் ஸ்டியரிங், ஆக்ஸிலேட்டர், பிரேக் என்று எதுவும் இல்லை, ஏனென்றால், இது எதுவும் இதற்குத் தேவையில்லை. எங்களது மென்பொருள் மற்றும் சென்சார்களே எல்லா வேலையையும் பார்த்துக் கொள்ளும்.

இந்தக் கார்கள் அமெரிக்காவின் சில பகுதிகளில் சோதனை முயற்சியாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த முதல் தேதி சான்பிரான்சிஸ்கோ நகரின் அருகேயுள்ள மவுண்டன் வியூ பகுதியில் ஒரு கூகுள் கார் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த மூன்று பேர் காயமடைந்த தகவல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.

சுமார் 17 மைல் வேகத்தில் வந்த இன்னொரு கார் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இதில் காயமடைந்த மூன்று பயணிகள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதாகவும் தெரியவந்தது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பஸ்சின் பக்கவாட்டில் உரசி கூகுள் கார் மீண்டும் விபத்துக்குள்ளான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் மவுண்ட்டன் ஹில் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பாக கூகுள் நிறுவன அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி மாலை 3.20 மணியளவில் எல் காமினோ ரியல் சாலைவழியாக சென்றுகொண்டிருந்தபோது இடதுப்புறமாக திரும்பியபோது சாலையோரத்தில் உள்ள ஒரு கால்வாயின் ஓரமாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அந்த மூட்டைகளின் மீது ஏறாமல் இருப்பதற்காக தானியங்கி முறையில் சென்றுகொண்டிருந்த அந்தக்கார், சாலையின் இடதுப்புறமாக ஒதுங்க முயற்சித்தது. அப்போது, அவ்வழியே சென்ற ஒரு பஸ்சின் பக்கவாட்டில் கூகுள் கார் உரசி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளானபோது அந்த பஸ் 15 மைல் வேகத்திலும், கூகுள் கார் 2 மைல் வேகத்திலும் சென்று கொண்டிருந்தன.

இனி, வருங்காலங்களில் இதுபோன்ற எதிர்பாராத சிக்கல்களையும் சாதுர்யமாக சமாளிக்கும் வகையில் தொழில்நுட்ப மேம்பாடுகள் தரம் உயர்த்தப்படும்.

அந்த செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

ஓட்டுனர்களின் அஜாக்கிரத்தையால் உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் பலியாகிவரும் நிலையில், எதிர்காலத்தில் இந்த மரண விகிதாச்சாரத்தை தானியங்கி கார்கள் வெகுவாக குறைக்கும் என நம்பப்பட்டுவரும் நிலையில் இதுவரை 18 சிறிய விபத்துகளை கூகுள் கார்கள் சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY